குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துடன் ஜார்ஜியா அதிபர் தொலைபேசியில் பேச்சு

Posted On: 03 JUN 2020 7:38PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திரு.ராம் நாத் கோவிந்துடன் ஜார்ஜியா அதிபர் மேதகு சலோம் சவ்ராபிச்விலி ஜூன்3, 2020 அன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இருதரப்பு நல்லுறவு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜார்ஜியாவுடன் சிறப்பான மற்றும் நட்புரீதியான நல்லுறவை இந்தியா கொண்டுள்ளதாக குடியரசுத்தலைவர் பெருமிதம் தெரிவித்தார். இரு நாடுகளும் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் தங்களது நல்லுறவில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பயிற்சி மற்றும் திறன் வளர்ப்புத்துறையில் ஜார்ஜியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் உலகமே சவால்களை சந்தித்து வருவதையும், உலகம் முழுவதும் அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஜார்ஜியாவின் முயற்சி போற்றத்தக்கது என்று கூறினார். கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இடைவிடாத முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும், இதில் பெருமளவில் வெற்றி கண்டுள்ளதாகவும் ஜார்ஜியா அதிபரிடம் ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார். இதே போல, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக சர்வதேச முயற்சிகளைத் திரட்டுவதில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை விநியோகித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

ஜார்ஜியாவில் அதிக அளவில் இந்திய மாணவர்கள் இருப்பதையும், அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக்கல்வியைப் பெற்று வருவதையும் குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், அவர்களை வெளியேற்றுவதற்கு ஒத்துழைப்பு அளித்த ஜார்ஜியா அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், ஜார்ஜியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலனுக்காக வழங்கிய ஒத்துழைப்புக்கும் ராம் நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார்.

*****


(Release ID: 1629418) Visitor Counter : 224