உள்துறை அமைச்சகம்
அரபிக் கடலில் வரவிருக்கும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது குறித்து NDMA, NDRF, IMD இந்தியக் கடலோர காவல் படை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா பரிசீலனை.
Posted On:
01 JUN 2020 8:23PM by PIB Chennai
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF), இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) மற்றும் இந்தியக் கடலோரk காவல் படையினருடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று பரிசீலனை செய்தார். மகாராஷ்டிரா குஜராத் டாமன் டையூ ஆகிய இடங்களில் சில பகுதிகளில் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு, அதையொட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாகவும்; இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும் என்றும்; மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணி நேரங்களில் மிக ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும்; மேலும் தீவிரமடைந்து அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுக்கும் என்றும், முன்னதாக இந்திய வானிலைத் துறை தெரிவித்திருந்தது.
குஜராத் மாநில முதல்வர் திரு விஜய் ரூபானி, மகாராஷ்டிர மாநில முதல்வர் திரு உத்தவ் தாக்கரே, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றின் நிர்வாகி திரு பிரபுல் பட்டேல் ஆகியோருடன் திரு.ஷா காணொளி மாநாட்டின் மூலம் கலந்துரையாடினார். இப்பகுதிகளைத் தாக்கக்கூடிய புயலை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் உறுதி அளித்தார். இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான அனைத்து தேவைகளையும் விவரமாக அளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே தேசிய பேரிடர் நிவாரணப் படை இரண்டு ரிசர்வ் குழுக்கள் உட்பட பதிமூன்று குழுக்களை குஜராத்துக்கும், 7 ரிசர்வ் குழுக்கள் உட்பட 16 குழுக்களை மகாராஷ்டிராவிற்கும் அனுப்பியுள்ளது. டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளன. தாழ்வான கரையோரப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் நிவாரணப் படை மாநில அரசுகளுக்கு உதவி வருகிறது
(Release ID: 1628657)
Visitor Counter : 199