மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கோவிட்-19 சூழ்நிலையில் புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும்

Posted On: 28 MAY 2020 6:02PM by PIB Chennai

கோவிட்-19 சூழ்நிலையில் புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத் திட்டம் தொடர்புடைய அமைச்சகங்களின் செயலாளர்கள் காணொளி மூலம் அண்மையில் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்துக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித் துறைச் செயலாளர் திரு அமித் காரே தலைமை வகித்தார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோடி அமைப்பாக இந்த அமைச்சகம் உள்ளது. கூட்டத்தில் பங்கேற்றவர்களை வரவேற்றுப் பேசிய திரு அமித் காரே, இதுவரையில் இத் திட்டத்தின் அமலாக்கம் பற்றி சுருக்கமாகக் கூறினார். கோவிட்-19 பாதிப்பு காரணமாக சூழ்நிலைகள் மாறுபட்டுள்ள நிலையில், புதுமை வழிமுறைகளில் இத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதில் சாத்தியமான விளைவுகளை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று எஸ்.இ.எல். துறையின் செயலாளர் திருமதி அனிதா கார்வல் வலியுறுத்தினார்.

இத் திட்டத்தில் இதுவரை நடந்துள்ள அமலாக்கம் பற்றி கூட்டத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

தகவல்களை தொலைக்காட்சி, வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொள்வதுடன், ஒவ்வொரு மாநிலங்களிலும் சிறந்த நடைமுறைகள் மற்றும் வெற்றிகரமான செயல்பாடுகள் பற்றிய தகவல்களை மற்ற மாநிலங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று தகவல், ஒலிபரப்புத் துறை இணைச் செயலாளர் திரு விக்ரம் சஹாய் யோசனை தெரிவித்தார். அனைத்துத் துறைகளும் தங்களுடைய டிஜிட்டல் ஆதார வளங்களை ஒன்று திரட்டி செயல்படவேண்டும் என்றும், இத் திட்டம் குறித்த வாராந்திர நிகழ்ச்சியில், இலக்கை நோக்கிய நிகழ்ச்சிகளுக்காக தூர்தர்ஷன் செய்தி சேனல் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அடுத்த மாதத்துக்கான திட்டங்களை முன்னதாகவே தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்குத் தெரிவித்தால், செய்திகளை விரிவாக அளிக்க முடியும் என்று ஐ.சி.சி. இணைச் செயலாளர் நீட்டா பிரசாத் யோசனை தெரிவித்தார்.

கூட்டத்தின் முடிவில் அவர் தொகுத்தளித்த, செயல்பாடுகளுக்கு உகந்த முக்கிய விஷயங்கள் :

  1. இத் திட்டத்தின் கீழ் பங்கேற்கும் அமைச்சகம் / துறைகளின் டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தி செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது.
  2. ஒரே பாரதம் உன்னத பாரதம் கொள்கைகள் குறித்து, பரவலாகத் தகவல் அளிக்க இணையவழிப் பயிலரங்குகள் நடத்துவது.
  3. ஒரே பாரதம் உன்னத பாரதம் டிஜிட்டல் ஆதார வளங்களுக்குப் பொதுவான தொகுப்பை உருவாக்கி, அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்த உதவி செய்தல். இந்தத் தொகுப்பை, பொதுவான முனையத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

திருத்தப்பட்ட தகவல் அளிப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து அமைச்சகங்கள் மூலமும் பெறப்பட்ட தகவல்களுடன், இலக்கை நோக்கிய செய்திகளாக தூர்தர்ஷனின் 30 நிமிட நேர நிகழ்ச்சியை உருவாக்க வேண்டும்.


(Release ID: 1627601) Visitor Counter : 366