மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் மீன் உற்பத்தியை 220 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்த பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா இலக்கு

Posted On: 26 MAY 2020 6:19PM by PIB Chennai

நாட்டில் மீன் உற்பத்தி 2018-19ல் 137.58 லட்சம் மெட்ரிக் டன் என்றிருந்த நிலையில், 2024-25க்குள் அதை 220 லட்சம் டன்களாக அதிகரிக்க பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டமிட்டுள்ளது. அதாவது 9 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது. இந்த உயர் லட்சிய நோக்கிலான திட்டத்தால் ஏற்றுமதி இரட்டிப்பாகி ரூ.1,00,000 கோடியை எட்டும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மீன்வளத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று தெரிவித்தார். பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னாவை மீனவர்கள், மீன் வளர்க்கும் விவசாயிகள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் மீன்வளத் துறையில் தொடர்புடையவர்களுக்கு அர்ப்பணித்த திரு கிரிராஜ் சிங், முதன் முறையாக மீன்பிடிக் கலன்களுக்கு காப்பீட்டு வசதி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

``பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா- இந்தியாவில் மீன்வளத் துறையில் நீடித்த மற்றும் பொறுப்புமிக்க வளர்ச்சி மூலம் நீலப் புரட்சியை உருவாக்கும் திட்டம்'' என்ற தலைப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத் திட்டத்துக்கு 2020 மே 20 ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். ரூ.20,050 கோடி முதலீட்டுடன் இத் திட்டம் அமல் செய்யப்படும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.9,407 கோடியாகவும், மாநிலங்களின் பங்கு ரூ.4,880 கோடியாகவும், பயனாளிகளின் பங்கு ரூ. 5,763 கோடியாகவும் இருக்கும். இத் திட்டம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 ஆம் நிதியாண்டு வரையில் என  ஐந்து ஆண்டுகளுக்கு அமல் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், தரம், நீடித்த செயல்தன்மை, தொழில்நுட்பங்களைப் புகுத்துதல், மீன்கள் பிடித்த பிறகு பராமரித்தலுக்கான ஏற்பாடுகள், மதிப்பு கூட்டு சங்கிலித் தொடரை நவீனப்படுத்தி பலப்படுத்துதல், `மீன் பிடித்ததில் இருந்து நுகர்வோர் வரை' என்ற தொடர் வழிகாட்டு உதவி, துடிப்பான மீன்வள மேலாண்மைக் கட்டமைப்பு, மீனவர்களின் நலன், மீன் ஏற்றுமதி போட்டி நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களுக்கு இத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று திரு கிரிராஜ் சிங் கூறினார்.

இத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் 42 சதவீதம் அளவுக்கு மீன் வளக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதலுக்கு செலவிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மீன்வளத் துறைக்கு தனியாரை ஈர்ப்பதன் மூலம் முக்கியமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்றும், மீன்பிடித்த பிறகு ஏற்படும் இழப்பை இப்போதைய 25 சதவீதத்தில் இருந்து, மதிப்பு கூட்டு சங்கிலித் தொடர் வசதிகளை நவீனப்படுத்தல் மற்றும் பலப்படுத்துதல் மூலம் 10 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஸ்வாத் சாகர் திட்டத்தின் கீழ் பயோ டாய்லெட்கள் அமைத்தல், மீன்பிடிக் கலன்களுக்கு காப்பீட்டு வசதி அளித்தல், மீன்வள மேலாண்மைத் திட்டங்கள், இணையவழி வர்த்தகம் (இ-டிரேடிங்) / மார்க்கெட்டிங் வசதி, மீனவர்கள் மற்றும் ஆதாரவளங்கள் மதிப்பீடு, தேசிய அளவில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தகவல் தொகுப்புகள் உருவாக்குதல் ஆகியவை உள்ளிட்ட நவீனப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆரோக்கியம் கருதி உள்நாட்டில் மீன் சாப்பிடுதலை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதைக் கோடிட்டுக் காட்டிய அவர், ``சாகர் மித்ரா''வுக்கு அரசு பதிவு செய்து, பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தின் இலக்குகளை எட்டுவதற்கு மீன் வளர்ப்பு விவசாயிகள் அமைப்புகளை உருவாக்க ஊக்குவிக்கும் என்று கூறினார். கடலோர மீன்பிடி கிராமங்களில் 3477 சாகர் மித்ராக்கள் உருவாக்கப்படுவதன் மூலம், மீன்வளத் துறையின் விரிவாக்கச் செயல்பாடுகளை நீங்கள் காணலாம். தொழில்முறைக் கல்வி பயின்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில், மீன்வள விரிவாக்க சேவை மையங்கள் அமைக்க தனியார் ஊக்குவிக்கப் படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறைந்த விலையில், தரமான மீன் குஞ்சுகள் கிடைப்பதில் தற்சார்பை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு கிரிராஜ் சிங், ஒரு ஹெக்டருக்கு இப்போது 3 டன் அளவுக்கு நீர்வாழ் உயிரின உற்பத்தி இருப்பதை ஹெக்டருக்கு 5 டன்கள் அளவுக்கு உயர்த்துவதற்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். அதிக மதிப்புடைய இனங்களை ஊக்குவித்தல், வணிக ரீதியில் அதிக மதிப்புடைய இனங்களை உற்பத்தி செய்ய தேசிய அளவில் மீன்குஞ்சு உற்பத்தி மையங்களை ஒருங்கிணைத்தல், மரபணு ரீதியிலான மேம்பாடு, இறால் குஞ்சு கையிருப்பில் தற்சார்பை எட்டுவதற்கு மையப்படுத்திய மீன்குஞ்சு மையம் உருவாக்குதல், மீன்குஞ்சு மையங்கள், மீன்குஞ்சு பொரிப்பு நிலையங்கள், பண்ணைகளுக்குத் தரநிலை அங்கீகாரம் அளித்தல், நோய்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், நோய் எதிர்ப்பு வசதிகள் அளித்தல், கழிவுகளை நீக்குதல் மற்றும் நீரின் தன்மையை ஆரோக்கியமாக பராமரிப்பதில் உதவிகள் செய்தல் ஆகியவற்றின் மூலம் இந்த இலக்கு எட்டப்படும் என்று அவர் விளக்கினார். இந்த நடவடிக்கைகள் மூலமாக தரமான, அதிக உற்பத்தி உறுதி செய்யப்பட்டு, ஏற்றுமதிக்கான போட்டி நிலைமை மேம்படும் என்றும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிக விலைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

உலக மீன் உள்பத்தியில் 7.73 சதவீதம் அளவுக்கு நடைபெறும் நிலையில் ஏற்றுமதி மூலம் ரூ.46,589 கோடி (2018-19) இந்தியாவுக்குக் கிடைக்கிறது. உலகில் இரண்டாவது பெரிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு நாடாகவும், மீன் ஏற்றுமதியில் 4வது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது. வரக்கூடிய ஆண்டுகளில்மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் முதலாவது நிலையை எட்டும் சக்தி இந்தியாவில் உள்ளதாக திரு கிரிராஜ் சிங் தெரிவித்தார். மீன்வளத் துறையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதற்கு, தமது அமைச்சகம் உறுதிபூண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருவாயில் மீன்வளத் துறை உறுதியான வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். 2014-15 முதல் 2018-19 வரையிலான காலத்தில் இத் துறையில் ஆண்டுதோறும் சராசரியாக 10.88 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும், மீன் உற்பத்தியில் 7.53 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும், ஏற்றுமதி வருவாயில் 9.71 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வேளாண்மை ஏற்றுமதியில் இத் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது என்றார் அவர். நாட்டின் பொருளாதாரத்தில் மீன்வளத் துறையின் ஒட்டுமொத்த மதிப்பு கூட்டு நிலை (ஜி.வி.ஏ.)  2018-19ல்  ரூ. 2,12,915  கோடியாக இருந்த நிலையில் தேசிய ஜி.வி.ஏ.வில் அது 1.25 சதவீதம் என்றும், வேளாண்மைத் துறை ஜி.வி.ஏ.வில் 7.28 சதவீதம் என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் பின்வரும் அம்சங்கள் அடங்கும் (i) மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துக்கு மத்திய அமைச்சரவையில் தனி இலாகா உருவாக்கம். (ii) சுதந்திரமான நிர்வாகக் கட்டமைப்பு வசதியுடன் மீன்வளத் துறைக்கு புதிய மற்றும் பிரத்யேகமான துறை உருவாக்கம். (iii) 2015-16 முதல் 2019-20 வரையிலான காலத்தில் மத்திய அரசின் ரூ.3,000 கோடி ஒதுக்கீட்டில் நீலப் புரட்சி: மீன்வளத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குக்கு மத்திய அரசு நிதியிலான திட்டம் அமல். (iv) 2018-19இல் ரூ.7,522.48 கோடி அளவிலான நிதியுடன் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் (எப்.ஐ.டி.எப்.) உருவாக்கம் மற்றும் (v) மீன்வளத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.20,050 கோடி முதலீட்டில் பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டம் தொடக்கம்.(Release ID: 1627019) Visitor Counter : 58