மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கிடைத்துள்ள நம்பிக்கை: காமன்வெல்த் பொதுச் செயலர்.

Posted On: 24 MAY 2020 4:31PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் வெற்றியை ஊக்கப்படுத்தியுள்ள காமன்வெல்த் பொதுச் செயலாளர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து, இந்த முன்முயற்சிக்காக தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார். வளரும் மற்றும் வளரத் துடிக்கும் மற்ற காமன்வெல்த் நாடுகளுக்கு இது புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

குறைந்த செலவில் டிஜிட்டல் சேவைகள் அளிப்பதன் மூலம், மக்களின் உயர் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய புதுமைச் சிந்தனை மற்றும் வாய்ப்புகளை அளிப்பதற்கு இந்தியா மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று, சமீபத்தில் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேட்ரிசியா கூறியுள்ளார். ``நமது ஏழை நாடுகளை, சிறிய, வளரும் நாடுகளைப் பார்த்தால், வளர்ந்த நாடுகளைப் பார்த்து தங்களால் அப்படி உருவாக முடியாதோ என்று அவை அஞ்சுகின்றன. இதற்கு அதிக செலவாகும் என கருதுகின்றன. ஆனால் இந்தியாவில் கட்டுபடியாகும் செலவுக்குள் இந்த விஷயங்கள் சாதிக்கப்பட்டுள்ளன என்பதை அறிவது நம்பிக்கை தருவதாக உள்ளது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஜனவரியில் இந்தியாவுக்கு தாம் மேற்கொண்ட பயணம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அமைச்சர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் கலந்துரையாடியதை அவர் நினைவுகூர்ந்துள்ளார். சிறிய, பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் உள்ள மற்றும் வளரும் நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்பதை அந்தக் கலந்துரையாடல்களின் போது அறிய முடிந்தது என்று தெரிவித்த அவர், ``அந்த எண்ணத்தை வரவேற்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றிக்காக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத்துக்கு பாராட்டு தெரிவித்த பேட்ரிசியா, இந்த முன்னேற்றங்களுக்கு அமைச்சர் முக்கிய காரணமாக இருக்கிறார் என்று கூறினார். ரவிசங்கர் பிரசாத் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ``நமது காமன்வெல்த் குடும்பத்தில் மற்ற உறுப்பு நாடுகளுக்கு அவர் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார்'' என்று கூறியிருக்கிறார்.

*****(Release ID: 1626600) Visitor Counter : 24