பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கொவிட்டுக்கு பின்பு உலக அரங்கில் இந்தியா மிகுந்த நம்பிக்கை மற்றும் மரியாதை மிக்க நாடாக உருவெடுக்கும்- டாக்டர். ஜித்தேந்திர சிங்

Posted On: 22 MAY 2020 8:32PM by PIB Chennai

கொவிட்டுக்கு பின்பு  உலக அரங்கில் இந்தியா மதிப்பு மிக்க, மிகுந்த நம்பிக்கைக்குரிய நாடாக உருவெடுக்கும் என்று  மத்திய அமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அனைத்துவிதமான அச்சங்கள், எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இன்றிலிருந்து 6 மாத காலத்திற்குப் பின், உலகம் இந்தியாவை மரியாதையுடன் நோக்கி, நம்மிடம் உறவு வைத்திருக்க விரும்பும் என்று டாக்டர். ஜித்தேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார். இத்துடன் நில்லாமல், தொழில் நடத்த பாதுகாப்பான இடமாக இந்தியா உருவெடுக்கும் என்று அவர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்கூட்டியே அறிவித்த ஊரடங்கு, கொவிட்டுக்குப் பிந்தைய கால புதிய மரபுகளுக்கு தனக்குத் தானே பயிற்சி பெற இந்தியாவுக்கு உதவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுற்றுலாவை நம்பியுள்ள வடகிழக்குப் பிராந்தியத்தில் கொவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அந்தப் பிராந்தியத்துக்கு பொறுப்பு வகிக்கும் தம்மிடம் குறிப்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த டாக்டர். ஜித்தேந்திர சிங், ஐரோப்பா மற்றும் இதர மேற்கத்திய நாடுகளில் கொரோனாவால் சுற்றுலாத் தளங்கள் பெரும் பாதிப்பை அடைந்திருப்பதால், வடகிழக்குப் பகுதி , வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றும், இதனால் சுற்றுலா ஆதாயம் பெறும் என்றும் கூறினார். இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியம் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்படாத பகுதியாக இருப்பதாலும், மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களைக் கொண்ட சிக்கிமில் எந்த இடத்திலும் ஒருவர் கூட தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதாலும் இது சாத்தியமாகும் என அவர் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் தொழிலைப் பொறுத்தவரை, ‘’ மேக் இன் இந்தியா’’ திட்டத்தின் மூலம் உத்வேகம் பெறுவதற்கு இந்தியாவுக்கு தற்போது நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர். ஜித்தேந்திர சிங் கூறினார். மூங்கிலை உதாரணமாகக் காட்டிய அவர், ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5000  முதல் ரூ 6000 கோடி வரை மூங்கில் தொழிலுக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அகர்பத்தி உள்ளிட்ட இதர மூங்கில் பொருள்கள் இப்போது வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதேபோல, நமது மருந்துத் தயாரிப்பு தொழில் ஏற்கனவே ஊக்கம் பெற்றிருப்பதாகவும், இந்த கொவிட்-19 சூழலிலும், நாம் மருந்து மற்றும் தடுப்பூசித் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கென அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உள்ளூர் அறிவிக்கை பற்றி கேட்டதற்கு பதிலிளித்த டாக்டர். ஜித்தேந்திர சிங்,  2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கிய நடைமுறையின் நீட்டிப்பு இது எனக் கூறினார். அது இப்போது தர்க்க ரீதியான முடிவை அடைந்திருப்பதாக தெரிவித்த அவர், இந்த முடிவால் ஏற்பட்டுள்ள நேர்மறையான விளைவுகளை வருங்கால தலைமுறையினர் உணருவார்கள் என்றும் தெரிவித்தார்.

<><><><><>



(Release ID: 1626376) Visitor Counter : 195