புவி அறிவியல் அமைச்சகம்

ஐஎம்டியின் http://mausam.imd.gov.in வலைதளத்தில் செயல்படும் 7 சேவைகள் , உமாங் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன

Posted On: 22 MAY 2020 2:33PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் (IMD) தலைமை இயக்குநர் டாக்டர். எம். மகோபத்ரா; தேசிய மின் நிர்வாகப் பிரிவுத் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் திரு. அபிஷேக் சிங் ஆகியோர் முன்னிலையில், புதுயுக நிர்வாகத்துக்கான ஒருங்கிணைந்த கைபேசி செயலியை (உமாங்), புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர். எம். ராஜீவன் 2020 மே 22-ஆம் தேதி தொடங்கிவைத்தார்.

‘உமாங்’ (UMANG) மத்திய அரசின் ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, பல்வழி, பல்தள, பல்சேவை ஆகியவை இணைந்த ஒற்றை முனையக் கைபேசி செயலியாகும். பல்வேறு அமைப்பு சேவைகளின் ( மத்திய, மாநில) உயர் தாக்கத்தை அணுகுவதற்கான வலுவான தளத்தால் இது இயக்கப்படுகிறது.

நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்,இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அண்மைக்காலமாக வானிலை முன்னறிவிப்பு, எச்சரிக்கை சேவைகளை பரப்புவதற்கு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த முன்முயற்சியை மேலும் வலுப்படுத்த இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை டிஜிடல் இந்தியா திட்டத்தின் மூலம் ‘’உமாங் செயலி’’யை முன்னெடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் http://mausam.imd.gov.in வலைதளத்தில் செயல்படும் பின்வரும் ஏழு சேவைகள் , உமாங் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.

  • நடப்பு வானிலை – 150 நகரங்களுக்கான தற்போதைய வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை ஆகியவை குறித்த அவ்வப்போதைய தகவல்கள் தினசரி எட்டு முறை தரப்படுகிறது. சூரிய உதயம், மறைவு, சந்திர உதயம், மறைவு ஆகியவை பற்றிய தகவலும் தரப்படுகிறது.
  • தற்போதைய நிலை - உள்ளூர் வானிலை அதன் தாக்கம் ஆகியவை இந்தியா முழுவதும் உள்ள சுமார் 800 நிலையங்கள், மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் மாநில வானிலை ஆய்வு மையங்களால் மூன்று மணிக்கொரு முறை அறிவிக்கப்படுகிறது. மோசமான வானிலை நிலவினால், அதன் தாக்கம் பற்றியும் எச்சரிக்கை செய்தியில் தரப்படுகிறது.
  • நகர முன்னறிவிப்பு இந்தியாவின் சுமார் 450 நகரங்களுக்கான வானிலை குறித்த கடந்த 24 மணி நேரம், 7 நாட்களுக்கான முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது.
  • மழைப்பொழிவுத் தகவல்- அகில இந்திய மாவட்ட மழைப்பொழிவுத் தகவல் தினசரி, வாரந்திர, மாதாந்திர அடிப்படையில் ஒட்டுமொத்தமாகக் கிடைக்கும்
  • சுற்றுலா முன்னறிவிப்பு - இந்தியாவின் சுமார் 100 சுற்றுலா நகரங்களின் கடந்த 24 மணி நேர, 7 நாட்கள் வானிலை பற்றிய தகவல் அளிக்கப்படுகிறது.
  • எச்சரிக்கைகள் - அபாயகரமான வானிலை நெருங்குவது பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்ய உஷார் நிலை வெளியிடப்படுகிறது. இது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் அறிவிக்கப்படுகிறது. சிவப்பு கடும் எச்சரிக்கையின் அடையாளமாகும். அடுத்த 5 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் தினசரி 2 முறை வெளியிடப்படுகிறது.
  • புயல் - சூறாவளிப் புயல்கள் , அவற்றின் மையம், நகரும் திசை, கரையைக் கடக்கும் நேரம், இடம் ஆகியவை குறித்த எச்சரிக்கை; எச்சரிக்கை அடிப்படையிலான தாக்கம், பகுதி, மாவட்ட வாரியாக வெளியிடப்படுகிறது. இதன் மூலம், பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள பகுதிகளில் மக்களை அகற்றுவது உள்ளிட்ட உரிய  முன்னேற்பாடுகளைச் செய்யமுடியும்.

செயலியைப் பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்;

1. Web: https://web.umang.gov.in/web/#/

     2.Android: https://play.google.com/store/apps/details?id=in.gov.umang.negd.g2c

          3.iOS: https://apps.apple.com/in/app/umang/id1236448857



(Release ID: 1626094) Visitor Counter : 244