சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அணிசேரா நாடுகளின் (NAM) சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பங்கேற்பு

Posted On: 20 MAY 2020 5:58PM by PIB Chennai

காணொலி காட்சி மூலம் நடந்த, அணிசேரா நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் பங்கேற்றார்.

கோவிட்-19 உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அணிசேரா நாடுகளின் கூட்டம் நடத்தப்படுகிறது. கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு கவலை தெரிவித்துள்ள அணிசேரா நாடுகள், இதை எதிர்த்துப் போராட உறுதி எடுத்துள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு அசர்பைஜான் குடியரசு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஆக்டே சிராலியேவ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் டாக்டர். ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:

”சரியான நேரத்தில் நடத்தப்படும் இந்த முக்கியமான கூட்டத்தை நடத்தியற்கு அசர்பைஜான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

உலக வரலாற்றில் இது போன்ற சிக்கலான நேரம் எப்போதும் ஏற்பட்டதில்லை. கோவிட்-19, உலகம் முழுவதும் 3 லட்சம் பேரின் விலைமதிப்பற்ற உயிர்களை பலிவாங்கியுள்ளது. 40 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளது. நாம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருவரையொருவர் சார்ந்துள்ளோம் என்பதை கோவிட்-19 உணர்த்தியுள்ளது. பருவநிலை மாற்றம், பொது சுகாதார அவசர நிலை போன்ற மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சவால்களை நாம் ஒன்றிணைந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்பதை கோவிட்-19 உணர்த்தியுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தேவை. வலுக்கட்டாயம் தேவையில்லை.

உலக நாடுகள் இன்னும் அதிகளவில் ஜனநாயகமாக, வெளிப்படையாக, நம்பகத்தன்மையாக, பயனுள்ளதாக மாற வேண்டும் என்பதை தற்போது பெருந்தோற்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது. சீர்திருத்தப்பட்ட பன்முககொள்கைதான் இப்போதைய தேவை.

கோவிட்-19ஐ எதிர்த்து இந்தியா உறுதியுடன் போராடுகிறது. இந்த நிலையை வேகமாக கையாள்வதை எங்கள் பிரதமர் திரு.நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்ய இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. தேசிய அளவிலான முடக்கத்துக்கு 1.35 பில்லியன் இந்தியர்கள் மதிப்பளித்ததால், இங்கு இறப்பு வீதம் குறைந்துள்ளது, நோய் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களை அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல், விரைவான சிகிச்சை அளித்தல் போன்ற எங்களது கொள்கை நல்ல பயனை அளித்துள்ளது. கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் 10,000 தனி மருத்துவமனைகள் மற்றும் கவனிப்பு மையங்கள் உள்ளன. இங்கு 20 லட்சம் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாங்கள் எங்கள் மக்களை கவனிப்பதுபோல், இதர நாடுகளுக்கும் உதவிகள் வழங்குகிறோம்.  123 நாடுகளுக்கு இந்தியா மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது. இவற்றில் 59 அணி சேரா நாடுகள். கோவிட்-19க்கு தடுப்பு மருந்து உருவாக்கும் உலகளவிலான முயற்சியில், நாங்களும் தீவிரமாகப் பங்கெடுத்துள்ளோம்.

நன்றி.”

இவ்வாறு அவர் பேசினார்.


(Release ID: 1625700) Visitor Counter : 242