உள்துறை அமைச்சகம்

பெருமளவிலான மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கு முடக்கநிலைக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது: திரு அமித்ஷா

Posted On: 20 MAY 2020 5:01PM by PIB Chennai

பெருமளவிலான மாணவர்களின் கல்வி நலன்களைக் கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துவதற்கான செயல்பாடுகளுக்கு முடக்கநிலை கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

முடக்கநிலைக் கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களின் கீழ், பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில கல்வி வாரியங்கள் / சிபிஎஸ்இ / ஐ.சி.எஸ்.இ. போன்ற அமைப்புகள் தேர்வுகள் நடத்துவது தற்காலிகமாகத் தள்ளிவைக்கப் பட்டுள்ளது. பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் சிபிஎஸ்இ-யிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு, தேர்வுகளை நடத்துவதற்கான விரிவான நிபந்தனைகள் குறித்து அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. நிபந்தனைகள் விவரம்:

  • கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில், தேர்வு மையங்கள் வைக்க அனுமதி கிடையாது.
  • ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவச உறை அணிந்திருக்க வேண்டும்.
  • தேர்வு மையங்களில் உடல் வெப்பத்தைக் கண்டறியும் தெர்மல் ஸ்கேன் வசதி மற்றும் கிருமிநாசினி வசதி இருக்க வேண்டும். அனைத்துத் தேர்வு மையங்களிலும் தனி நபர் இடைவெளி நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும்.
  • பல்வேறு வாரியங்கள் தேர்வுகளை நடத்த வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கான கால அட்டவணைகளை இடைவெளி விட்டு அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • மாணவர்கள் தேர்வு மையத்துக்குச் செல்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறப்புப் பேருந்து ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

 

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலைக் காண இங்கே கிளிக் செய்யவும்: https://static.pib.gov.in/WriteReadData/userfiles/10th-12th%20Exams%20exempted%20from%20Lockdown.jpg(Release ID: 1625670) Visitor Counter : 13