பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் கோவிட்-19 தொடர்பான உதவிகளை செய்த ராணுவ மருத்துவ சேவைப் பிரிவுக்கு மத்திய அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்திர சிங் பாராட்டு
Posted On:
18 MAY 2020 9:05PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கோவிட்-19 கட்டுப்படுத்தலுக்கு உதவிய ராணுவ மருத்துவ சேவைப் பிரிவுக்கு, மத்திய இணை அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார்.
ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் அனுப் பானர்ஜி, மத்திய பணியாளர் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கொரோனா நிலவரத்தை கட்டுப்படுத்துவதில், ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு செய்த பணிகளை விளக்கிக் கூறினார். அருணாச்சலப் பிரதேசத்தின் தெங்கா, லிகாபலி பகுதிகளில் உள்ள ராணுவ மருத்துவமனைகள், அசாம் மாநிலத்தின் ஜோர்கட், மேகாலயாவின் ஷில்லாங் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவினர் கோவிட்-19 ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை விளக்கினார்.
மேலும் காஷ்மீரின் உதம்பூர், ஸ்ரீநகர், ராஜோரி பகுதிகளில் உள்ள ராணுவ மருத்துவமனைகள் நூற்றுக்கணக்கான படுக்கை வசதிகளுடன் பாதுகாப்பு படையினர் மற்றும் பொது மக்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மற்றும் சிகிச்சை, தனிமைப்படுத்தல் மையங்கள் போன்ற வசதிகள் செய்து கொடுத்ததை விளக்கினார். வரும் மாதங்களில், நிலைமையைப் பொறுத்து, ராணுவ மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வசதிகள் அதிகரிக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கோவிட்-19 வைரஸ் பரவலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த தயார் நிலையில் செயல்பட்ட ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவை மத்திய அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்திர சிங் வெகுவாகப் பாராட்டினார்.
*****
(Release ID: 1625055)