குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகுப்பும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான புதிய விளக்கமும் தொழில் துறைக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும்: திரு. கட்காரி
Posted On:
17 MAY 2020 5:46PM by PIB Chennai
சிறு, குறு, நடுத்தர தொழில்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுக்கு/துறைகளுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகுப்பும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான புதிய விளக்கமும் தொழில் துறைக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், திரு. நிதின் கட்காரி கூறினார். சிறு, குறு, நடுத்தர தொழில்களின் மதிப்பீட்டை ஆராய்ந்து பார்க்குமாறு கேட்டுக்கொண்ட அவர், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கானத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிதியை சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறும் பங்கேற்பாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
பிஸினஸ் நெட்வொர்க் இண்டெர்நேஷனல் மற்றும் எம் எம் ஆக்டிவ் சை-டெக் கம்யூனிகேஷன்ஸின் பிரதிநிதிகளோடு இன்று நடைபெற்ற கூட்டங்களில் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். "சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மீது கொவிட்-19இன் தாக்கம்" மற்றும் "20 லட்சம் கோடித் தொகுப்புக்குப் பின் இந்திய தொழில்களின் எதிர்காலம்" என்னும் இந்த கூட்டங்கள் காணொலி மூலம் முறையே நடைபெற்றன.
வேளாண் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் மீன்வள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஆய்வு செய்யத் தேவை ஏற்பட்டுள்ளதாக திரு. நிதின் கட்காரி மேலும் தெரிவித்தார்.
அரசு உட்பட அனைத்து பங்குதாரர்களும் கொவிட்-19 காரணமாக சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்மறைத் தன்மை யாருக்கும் நன்மை பயக்காது என்பதால், இந்தக் கடினமான நேரங்களில் நெருக்கடியைக் கடந்து வர நேர்மறை எண்ணங்களைக் கடைப்பிடிக்குமாறு அவர் தொழில் துறையைக் கேட்டுக்கொண்டார்.
பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த திரு கட்காரி, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று உறுதி அளித்தார். நேர்மறை அணுகுதலை தொழில்கள் மேற்கொண்டு, கொவிட்-19 நெருக்கடி முடிந்த பின்பு உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
***********
(Release ID: 1624847)
Visitor Counter : 214