உள்துறை அமைச்சகம்

புலம் பெயர் தொழிலாளர்கள் பேருந்துகள் மூலமோ ‘ஷ்ராமிக்’ சிறப்பு ரயில்கள் மூலமோ பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் : மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Posted On: 15 MAY 2020 10:41PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மே 11ம் தேதி அன்று எழுதிய  கடிதத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பேருந்துகள் மூலமோ ,இந்த நோக்கத்துக்காகவே அரசு இயக்கும் ‘ஷ்ராமிக்’ சிறப்பு ரயில்கள் மூலமோ தங்கள் சொந்த  ஊர் திரும்புவதற்கு விரைந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க  வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் நடந்து செல்லும் நிலை பற்றி அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த நிலை பற்றிக் கண்டறிந்தால், அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அருகில் உள்ள தங்குமிடங்களுக்கு கொண்டு சென்று, அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ‘ஷ்ராமிக்’ ரயில்கள் அல்லது பேருந்துகளில் ஏறும்வரை, உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் நடந்து செல்வதும், லாரிகளில் பயணம் செய்வதும் இன்னும் தொடருவதாக செய்திகள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

ரயில்வே அமைச்சகம் தினசரி 100க்கும் மேற்பட்ட ‘ஷ்ராமிக்’ சிறப்பு ரயில்களை இயக்கி வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை ஏற்பாடு செய்யவும் தயார் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தி, நடந்து செல்ல வேண்டாம் என அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, பேருந்துகள் மூலமோ, அரசால் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலமோ அவர்கள் பயணம் செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரபூர்வ தகவலைக் காண இங்கே உள்ள இணைப்பை தொடர்பு கொள்ளவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1624232.

 

-------------------------------
 



(Release ID: 1624395) Visitor Counter : 251