பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியின இளைஞர்களுக்கு டிஜிட்டல் திறன் அளிக்க பழங்குடியினர் நல அமைச்சகம் ஃபேஸ்புக்குடன் இணைந்து உருவாக்கி உள்ள “கோல்” திட்டம் - அமைச்சர் அர்ஜுண் முண்டா தொடங்கி வைத்தார்

Posted On: 15 MAY 2020 12:32PM by PIB Chennai

பழங்குடியினர் நல அமைச்சகம் ஃபேஸ்புக்குடன் இணைந்து உருவாக்கி உள்ள “கோல்” (ஆன்லைனில் தலைவர்களாக செயல்படுதல்) என்ற திட்டத்தை மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் திரு அர்ஜுண் முண்டா புதுதில்லியில் இணைய வழி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.  பழங்குடியினர் நல அமைச்சகத்தின் இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சரூதா; பழங்குடியினர் அமைச்சக செயலாளர் திரு தீபக் காந்தகர் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஃபேஸ்புக் நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் இணைய வழி வாயிலாக நடந்த இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  கோல் திட்டமானது பழங்குடியின இளைஞர்களுக்கு டிஜிட்டல் முறையில் வழிகாட்டுதலைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  டிஜிட்டல் முறையில் செயல்படும் இந்தத் திட்டமானது பழங்குடியின இளைஞர்களிடையே மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு உந்து சந்தியாக விளங்கும்.  மேலும் இது அவர்களின் ஆளுமையை வளர்ப்பதோடு அவர்களது சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் இருக்கும்.  இந்த இணையத்திற்கான இணைப்பு கீழே தரப்படுகிறது:

https://www.facebook.com/arjunmunda/videos/172233970820550/UzpfSTY1Nzg2NDIxNzU5NjMzNDoyODg4MDg1MTAxMjQwODkw/

இந்த திட்டத்தை அறிவித்த திரு அர்ஜுன் முண்டா கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திப்பதில் டிஜிட்டல் கல்வியறிவு முக்கியத்துவம் பெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.  ”கோல்” என்ற இந்தத் திட்டத்துக்காக பழங்குடியினர் உறவுகள் அமைச்சகம் ஃபேஸ்புக்குடன் இணைந்திருப்பது என்பது சரியான நேரத்தில் ஏற்பட்ட நல்லுறவாகும்.  பழங்குடியின இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்பை இந்தத் திட்டம் உருவாக்கித் தர உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பழங்குடியின இளைஞர்கள் 5000 பேர் (அவர்கள் “வழிகாட்டப்படுபவர்கள்” என்று அழைக்கப்படுவர்) பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்களால் (“வழிகாட்டுபவர்கள்” என்று அழைக்கப்படுவர்) பயிற்சி பெறும் சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள். வழிகாட்டப்படும் இளைஞர்கள் இரண்டு நபருக்கு ஒரு வழிகாட்டுபவர் இருப்பார்.  தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடியின இளைஞர்கள் டிஜிட்டல் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி தங்கள் ஆசைகள், கனவுகள் மற்றும் திறமைகளைத் தங்களுக்கு வழிகாட்டுபவருடன் பகிர்ந்து கொள்வார்கள்.

  • கோல் (ஆன்லைனில் தலைவர்களாக செயல்படுதல்), என்பது ஃபேஸ்புக் இந்தியாவும் பழங்குடியினர் நல அமைச்சகமும் இணைந்து உருவாக்கி உள்ள கூட்டு முன்னெடுப்பாகும்.
  • டிஜிட்டல் தொழில்முனைவுத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் தொழில் நிபுணர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் என 5000 இளம் பழங்குடியின தொழில்முனைவோர் டிஜிட்டல் திறன்கள் பெற பயிற்சி பெறுவார்கள்.
  • விருப்பமுள்ள இளைஞர்கள் ஆன்லைன் போர்ட்டலான “goal.tribal.gov.in”  என்பதில் விண்ணப்பிக்கலாம்.
  • இதற்கு மே 4, 2020 முதல் ஜுலை 3, 2020 நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.
  • வழிகாட்டிகளாகச் செயல்படுவதற்கு தொழில் உலகத்தின் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் “goal.tribal.gov.in” என்பதில் பதிவு செய்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.


(Release ID: 1624168) Visitor Counter : 167