மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நாடு முழுவதிலும் ஆசிரியர்களுடன் ஆன்லைன் மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கலந்துரையாடல்

Posted On: 14 MAY 2020 5:34PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் புதுதில்லியிலிருந்து, ஆன்லைன் மூலம் இன்று கலந்துரையாடிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்ற செய்தியை தெரிவித்தார். கோவிட்-19 பெருந்தொற்று குறித்து மாணவர்கள் மத்தியிலும், சமூகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆன்லைன் கலந்துரையாடலில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சரிடம் அவர்கள் கேள்விகளையும் எழுப்பினர்.

இந்த கலந்துரையாடலின்போது, இரண்டு முக்கிய அறிவிப்புகளை மத்திய அமைச்சர் வெளியிட்டார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், நெட் தேர்வுக்கான தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். நவோதய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகளை நிறைவுசெய்த ஆசிரியர்கள், பொது முடக்கம் முடிந்தபின்னர், பணிநியமனம் செய்யப்படுவர் என்றும் அவர் அறிவித்தார்.

அனைத்து ஆசிரியர்களும் தங்களது பணிகளை செய்ய வேண்டும் என்றும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த கலந்துரையாடல் மூலம் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்தியாவில், ஆசிரியர்களின் முக்கியத்துவம் என்பது எப்போதுமே கடவுளைவிட மேலாக இருப்பதாகவும், அதன்காரணமாகவே, ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்ற உணர்வுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நெருக்கடி நேரத்திலும், ஆசிரியர்கள், முதல்நிலை பணியாளர்களைப் போலவே செயல்படுவதாகவும், அவர்களது பணி மிகவும் பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8,000-க்கும் மேற்பட்டோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், நவோதயா வித்யாலயா பள்ளிகளில் சுமார் 2,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நவோதயா பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் நியமன நடவடிக்கைகளில் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பொது முடக்கம் நிறைவுக்கு வந்தபின்னர், பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருக்கக் கூடாது என்று நமது அரசு நம்புவதாக கூறிய திரு.பொக்ரியால், காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த திரு.பொக்ரியால், ஆன்லைன் கல்வி முறை தொடர்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறினார். மின்னணு கற்றல் வளங்களை பயன்படுத்துவது குறித்து ஆசிரியர் பயிற்சிக்கான பண்டித் மதன் மோகன் மாளவியா தேசிய இயக்கம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சித் திட்டங்களில் ஆசிரியர்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பதாக அமைச்சர் கூறினார். மாணவர்களுக்கு கற்பிப்பதில் புதிய தொழில்நுட்பங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

 

 

 

===================================

 



(Release ID: 1624048) Visitor Counter : 195