ஜவுளித்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவைப்படும் பிபிஇ முழு அங்கிக்கான மாதிரிகளை என்ஏபிஎல் அங்கீகரித்துள்ள ஆய்வுக்கூடங்கள் பரிசோதித்து வருகின்றன

Posted On: 08 MAY 2020 8:03PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவைப்படும் பிபிஇ முழு அங்கிகளை பரிசோதிப்பதற்காக 1. தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கூட்டமைப்பு   கோயம்புத்தூர், 2. டி.ஆர்.டி.ஓ-ஐ.என்.எம்.ஏ.எஸ், புதுதில்லி 3. கனரக இராணுவ வாகனத் தொழிற்சாலை, ஆவடி, சென்னை 4. சிறிய அளவு ஆயுதங்கள் தொழிற்சாலை, கான்பூர், உத்தரப்பிரதேசம், 5. இராணுவத் தளவாட தொழிற்சாலை, கான்பூர், உத்திரப்பிரதேசம், 6. இராணுவத் தளவாட தொழிற்சாலை, முரத்நகர், உத்திரப்பிரதேசம் 7. இராணுவத் தளவாட தொழிற்சாலை, ஆம்பெர்நாத், மகாராஷ்டிரம் 8. உலோக & ஸ்டீல் தொழிற்சாலை இஷாப்பூர், மேற்குவங்கம் என எட்டு ஆய்வுக்கூடங்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  இந்த ஆய்வுக்கூடங்கள் அனைத்தும் என்ஏபிஎல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசின் சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம்  மார்ச் 2 ல் வெளியிட்டுள்ள தொழில்நுட்ப தரங்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்த அங்கிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பிபிஇ முழு அங்கிகளை உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து பெறப்படும். மூலவடிவ மாதிரிகள் ஒவ்வொன்றும் பரிசோதனையில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு பிரத்யேக சான்றிதழ் அடையாளம் வழங்குவதற்கான விரிவான செயல்முறையை ஏப்ரல் 6 ம் தேதி அன்று ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  இந்த செயல்முறைகளை ஜவுளி அமைச்சகம்  ஏப்ரல் 22ம் தேதி மீண்டும் திருத்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து யூசிசி சான்றிதழ்களின் விவரங்களையும் பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்வதற்காக டிஆர்டிஓ, ஓ.எஃப்.பி (இராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம்) மற்றும் எஸ்.ஐ.டி.ஆர்.ஏ ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பார்வைக்கு கிடைக்கின்றன.

 



(Release ID: 1622454) Visitor Counter : 108