குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

நறுமணம், சுவையூட்டி பொருள்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் உள்நாட்டு உற்பத்தியிலும், வெளிநாட்டு இறக்குமதிக்கு மாற்று பொருள்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் - கட்கரி அழைப்பு

Posted On: 06 MAY 2020 7:42PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை (எம்.எஸ்.எம்.இ.), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, இந்திய நறுமணங்கள் மற்றும் சுவையூட்டிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருடன் இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ.கள் துறையில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் பற்றி அறிவதற்காக இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கோவிட் 19 தொற்ற நோய்த் தாக்குதல் சூழ்நிலையில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு சவால்கள் குறித்து சங்கத்தினர் கவலை தெரிவித்தனர். சில ஆலோசனைகளையும் முன்வைத்த அவர்கள், இந்தத் துறையை காப்பாற்றுவதற்கு அரசின் ஆதரவு தேவை என்று கோரிக்கை விடுத்தனர். நறுமணம் மற்றும் சுவையூட்டி பொருள்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர்  வெளிநாட்டு இறக்குமதிக்கு மாற்றுப் பொருள்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு கட்கரி அழைப்பு விடுத்தார். உள்நாட்டில் மூங்கில் வளர்ப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலகச் சந்தையில் போட்டியிடும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்கு, புதுமை சிந்தனை, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் திறன்களில் இந்தத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான சில பிரச்சினைகளும் ஆலோசனைகளும் :

மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகமாகவும், உற்பத்தி முடிந்த நிலையிலான பொருட்களுக்கு குறைவாகவும் இருப்பது, வட கிழக்குப் பிராந்தியத்தில் மின்சாரம் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது, கடன் வசதியை பலப்படுத்துதல், செயல்பாட்டு மூலதனப் பிரச்சினை, வருமான வரித் துறை திருப்பித் தர வேண்டிய தொகையை துரிதமாக தருவது உள்ளிட்ட விஷயங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.

இந்த விஷயங்களில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்று திரு கட்கரி உறுதி அளித்தார். தொடர்புடைய துறைகளின் கவனத்துக்கு இவற்றைக் கொண்டு செல்வதாக அவர் கூறினார்.

 

*****



(Release ID: 1621791) Visitor Counter : 176