மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெபினார் மூலம் கலந்துரையாடினார்

Posted On: 05 MAY 2020 4:08PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், வெபினார் மூலம் கலந்துரையாடினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பள்ளித்தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், கல்வியாண்டுக்கான அட்டவணை, ஆன்லைன் கல்வி, மாணவர்களுக்கான மனநலம், சர்வதேச மாணவர்கள், கட்டணங்கள், உதவித்தொகை முதலானவை தொடர்பான மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அமைச்சர் பதில் அளித்தார். 

கலந்துரையாடலின் போது, நிலுவையில் உள்ள நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகளை அமைச்சர் அறிவித்தார்.  நீட் தேர்வு 26 ஜுலை 2020இல் நடைபெறும் என்றும் அதே போன்று ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜுலை மாதம் 18, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜே.இ.இ. (அட்வான்ஸ்) தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.  யு.ஜி.சி நெட்–2020 மற்றும் சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்புக்கான தேர்வுத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மனநலம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடிய திரு ரமேஷ் பொக்ரியால் மாணவர்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும் என்றும் தங்களின் படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  மாணவர்கள் தங்களது படிப்புக்கான கால அட்டவணையை தயார் செய்து கொண்டு படிக்கவேண்டும் என்றும் இடையிடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார். நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுப்பதற்கு பாடத்திட்டத்தையும், தேர்வு மாதிரியையும் தெரிந்து கொள்வது முக்கியமானதாகும்.  மாணவர்கள் பதட்டமடையாமல் இருக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான விரிவுரைகளை தேசிய திறனறி தேர்வு ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான : https://nta.ac.in/LecturesContent என்பதில் பார்க்கலாம் என்று திரு பொக்ரியால் மாணவர்களிடம் தெரிவித்தார்.  மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு இயங்குதளங்களை நுழைவுத்தேர்வுக்கான தயாரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  ஸ்வயம்பிரபா டி.டி.எச் சேனல், ஸ்வம்பிரபாவின் ஐ.ஐ.டி பால், திக்‌ஷா, இ-பாடசாலை, தேசிய டிஜிட்டல் நூலகம், ஸ்வயம், இ-பிஜி பாடசாலை, ஷோத்கங்கா, இ-ஷோத்சிந்து, இ-யந்ரா, மொழி கற்றுக்கொள்வதற்கான தனிப்பயிற்சி மற்றும் மெய்நிகர் ஆய்வுக்கூடங்கள் ஆகியன மேலே குறிப்பிட்ட இயங்கு தளங்களில் உள்ளடங்கும்.  ஸ்வயம், ஸ்வயம்பிரபா, மெய்நிகர் ஆய்வுக்கூடங்கள், ஃபாசி, இ-யந்ரா மற்றும் மொழி கற்றுக்கொள்வதற்கான தனிப்பயிற்சி போன்ற உயர்கல்விக்கான ஆன்லைன் கற்பித்தல் போர்ட்டல்களை பயன்படுத்துகின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஊரடங்கிற்கு பிறகு ஐந்து மடங்கு  அதிகரித்து உள்ளதாக அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

கிராமப்பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள், தங்களுக்கு சரிவர நெட்வொர்க் கிடைக்காதது தொடர்பாக எழுப்பிய ஒரு கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கும் போது ஸ்வயம் பிரபா சேனல்களை டாட்டா ஸ்கை மற்றும் ஏர்டெல் டி.டி.எச் ஆப்பரேட்டர்களின் டி.டி.எச் பிளாட்ஃபார்ம்களில் ஒளிபரப்புதல், தூர்தர்ஷன்-டிடிஎச், டிஷ் டிவி மற்றும் ஜியோ டிவி செயலிகளில் ஒளிபரப்புதல் ஆகியவற்றுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

தேசிய தொழில்கல்வி நிறுவனம் (NIT), இந்தியத் தொழில்நுட்பக்கழகம் (IIT), இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்(IIIT) ஆகிய கல்வி நிறுவனங்களின் 2020-2021 கல்வி ஆண்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறித்த ஒரு கேள்விக்கு அமைச்சர் என்.ஐ.டி, ஐ.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, ஆகிய கல்வி நிறுவனங்களின் 2020-2021 ஆண்டுக்கான கல்வி கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று பதில் கூறினார்.

ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதை சரி செய்வது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக திரு பொக்ரியால் தெரிவித்தார்.  கோவிட்-19 ஊரடங்கு குறித்த ஒரு கேள்விக்கு வகுப்பு நேரம் எவ்வளவு குறைகிறதோ அதற்கேற்ப பொதுத்தேர்வு 2021ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாடஅளவு குறைக்கப்படும் என்று கூறினார்.  இதற்கேற்ப மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்ட குழுக்கள் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இது குறித்து மாணவர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

2020-21 கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை பாடவகுப்புகளுக்கான சேர்க்கை 31-8-2020க்குள் நிறைவுறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.  அவசியம் ஏற்பட்டால் தற்காலிகச் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டு தகுதி பெறும் தேர்வு முடிவுக்கான ஆவணங்கள் 30-9-2020 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.  2020-21ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டுப் பருவம், பழைய மாணவர்களுக்கு 01.08.2020 அன்றும், புதிய மாணவர்களுக்கு 01.09.2020  அன்றும் தொடங்கும்.  கூடுதலான விவரங்களை மாணவர்கள் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) வலைத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

 



(Release ID: 1621240) Visitor Counter : 235