சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
“இரத்த தானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்போம்; தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள ரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம்
Posted On:
04 MAY 2020 3:08PM by PIB Chennai
“இரத்ததானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததான விழிப்புணர்வை அதிகரிப்போம்; தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள இரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம். நாம் அனைவரும் ரத்த தானம் செய்வோம். யாரோ ஒருவருக்காக நாம் இருப்போம்” என்று டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கட்டிடத்தில் புதுதில்லியில் நடைபெற்ற இரத்ததான முகாம் ஒன்றில் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன் இவ்வாறு கூறினார்.
“ குருதி அழிவு சோகை (தலசீமியா) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்னிடம் பலமுறை வந்திருக்கிறார்கள். மரணம் நிச்சயம் என்ற நோய்களை கொண்ட நோயாளிகள் அவர்கள் வாழும் வரையிலான காலத்திற்கு தொடர்ந்து இரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டிய நிலை இருப்பது குறித்து பல வேண்டுகோள்களும்/ புகார்களும் எனக்கு டுவிட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்கள் மூலமாக வந்து கொண்டிருக்கின்றன. அவர்களுடைய தேவைகளை, எல்லா காலங்களிலும் பூர்த்தி செய்ய வேண்டியதும், இரத்த வங்கிகளில் புதிய ரத்தம் தொடர்ந்து கிடைக்க செய்யும் வகையில் இரத்தம் இருக்கச் செய்வதும் நம்முடைய கடமை”
நாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் அதை எதிர்கொள்ளத் தேவையான அளவிற்கு, அதிக அளவிலான இரத்த சேமிப்பு நம்மிடையே இருக்கும் வகையில் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்வதை ஒவ்வொருவரும் ஊக்குவிக்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். இனிவரும் காலங்களில் மனிதர்களுக்கான துன்பங்கள் குறையும் வகையில் “எல்லாவிதமான மனிதாபிமான செயல்பாடுகளையும் முயற்சிப்பது, உற்சாகப்படுத்துவது, ஊக்குவிப்பது ஆகியவை நம்முடைய கொள்கையாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
மாற்று இரத்தம் செலுத்த வேண்டிய நிலையிலுள்ள நோயாளிகளுக்குத் தேவையான, போதுமான அளவிற்கு இரத்தம் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இரத்ததானம் செய்பவர்களுக்கு அவர்கள் புறப்படும் இடத்திலிருந்து அவர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்கும் அவர்களை திருப்பிக் கொண்டு விடுவதற்கும் போக்குவரத்து வசதி செய்து கொடுத்து, இரத்த தானம் செய்ய முன்வரும் தன்னார்வலர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து இரத்த தானம் செய்து வருபவர்களின் இல்லங்களுக்கே சென்று இரத்ததானம் பெறக்கூடிய நடமாடும் ரத்த சேமிப்பு வேன்களை அனுப்பி, இந்த கடினமான காலத்தில் அவர்கள் இரத்த தானம் செய்ய முன் வருவதற்கு வசதி செய்யலாம் என்று செஞ்சிலுவைச் சங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார். தாமாகவே முன்வந்து இரத்ததானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர்களுக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுதொடர்பாக ஒரு காணொளி மாநாடும் நடத்தப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
நாட்டில் கோவிட்-19 காரணமாக நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து பேசிய மத்திய அமைச்சர், கோவிட்-19 நோய் பரவியுள்ள இந்த சிரமமான காலத்தில், தேவைப்படும் நோயாளிகளுக்கு மிக அவசியமாக அளிக்கவேண்டிய இரத்தம் கிடைப்பதை ஏற்பாடு செய்ய முடிகிறது என்று அவர் கூறினார். தாமாக முன்வந்து ரத்ததானம் செய்வதை அதிகரிப்பதன் மூலம் இரத்தம் சேகரிப்பதற்காக செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் கூட்டமொன்றைக் கூட்டியதாகவும், செஞ்சிலுவை சங்கப் பணியாளர்களுக்கும், இரத்த தானம் மூலம் இரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கும் 30000 கடவுச் சீட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்து உதவியதாகவும் அவர் கூறினார்.
(Release ID: 1620952)
Visitor Counter : 1985