சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 மேலாண்மையின் நிலைமையை ஆய்வு செய்ய, லேடி ஹார்டிங்க் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை டாக்டர். ஹர்ஷ் வர்த்தன் பார்வையிட்டார்.

Posted On: 03 MAY 2020 5:08PM by PIB Chennai

கொவிட்-19 மேலாண்மையின் நிலைமையை  ஆய்வு செய்ய, இந்தியாவின் பழமையான மற்றும் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான புதுதில்லி லேடி ஹார்டிங்க் மருத்துவக் கல்லூரியை (LHMC), மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர், டாக்டர். ஹர்ஷ் வர்த்தன் இன்று பார்வையிட்டார். மருத்துவமனை தயார் நிலைக்கான  அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, LHMC மற்றும் அதை சார்ந்த மருத்துவமனைகளான திருமதி. சுச்சேதா கிரிப்லானி மருத்துவமனை மற்றும் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை 30-படுக்கைகளைக் கொண்ட கொவிட்-19 மருத்துவமனைகளாக போதுமான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் படுக்கைகளுடன் செயல்படுகின்றன.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, வெளி நோயாளிகள் துறை, மாதிரிகள் மையம், கொவிட் வளாகத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் உடை மாற்றும் அறை ஆகியவற்றை மத்திய அமைச்சர் பார்வையிட்டார். மாதிரிகள் சேகரிப்பு மையத்தில் பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்யேக கொவிட்-19 மையமான புற்றுநோயியல் கட்டிடத்தில் அளிக்கப்படும் குளியல், உடை மாற்றுதல் மற்றும் கிருமிநாசினித் தெளிப்பு சிறப்பு வசதிகளைப் பார்த்து அவர் திருப்தி தெரிவித்தார். போக்குவரத்துப் பிரச்சினைகளையும், அவர்கள் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதற்கு அருகில் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ள சில தங்கும் விடுதிகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தங்கும் மற்றும் உணவு வசதிகள் அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது. அருகில் உள்ள இளம் கிறித்துவ ஆடவர் சங்கக் (YMCA) கட்டிடம் LHMC மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் நிர்வகிக்கப்படும் கொவிட் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருப்பதாகவும், பணியின் போதோ அல்லது மற்ற சமயங்களிலோ தொற்று உறுதி செய்யப்பட்ட LHMC பணியாளர்கள் உட்பட அறிகுறிகள் வெளியே தெரியாத, ஆனால் கொவிட் பாதிக்கப்பட்ட 70 நோயாளிகள் தற்போது அங்கு இருப்பதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

LHMC நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது கொவிட்-19 தொற்று ஏற்பட்டு தற்போது அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு பயிற்சி மருத்துவர்களுடன், காணொளி அழைப்பு மூலம் அமைச்சர் கொவிட் வளாகத்துடன் பேசினார். கொவிட் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இரு நோயாளிகளிடமும் காணொளி அழைப்பு மூலம் மத்திய அமைச்சர் பேசினார். கொவிட் வார்டில் உள்ள வசதிகளைப் பற்றி அவர்கள் அமைச்சரிடம் கூறினார்கள். "அவர்கள் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் மருத்துவமனையில் குணமடைந்து வருவதை அறிந்து நான் மகிழ்ச்சியாக உள்ளேன். குறிப்பாக, அனுமதிக்கப்பட்டுள்ள பயிற்சி மருத்துவர்களைப் பொறுத்த வரை, கொவிட் காரணமாகத் துன்பப்படும் போதும் அவர்களது அதிகமான மன உறுதி எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது," என்று அமைச்சர் கூறினார்.

வெவ்வேறு வார்டுகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் விரிவான ஆய்வு மற்றும் மேற்பார்வைக்குப் பிறகு, பல்வேறு அலகுகளின் பணிகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். "எய்ம்ஸ் (தில்லி), எல் என் ஜே பி, ஆர் எம் எல்சப்தார்ஜங்க், எய்ம்ஸ் சஜ்ஜார், ராஜிவ் காந்தி சிறப்பு மருத்துவமனை மற்றும் தற்போது LHMC என்று, கொவிட்-19க்கான தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக பல்வேறு மருத்துவமனைகளை கடந்த சில நாட்களாக நான் பார்வையிட்டு வருகிறேன். பெருந்தொற்றின் பரவலை சிறப்பாகக் கையாள இந்த மருத்துவமனைகள் செய்துள்ள ஏற்பாடுகளால் நான் திருப்தி அடைந்துள்ளேன்," என்று அவர் கூறினார்.


(Release ID: 1620697) Visitor Counter : 255