சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

காலி வாகனங்கள் உள்பட சரக்கு வாகனங்களின் போக்குவரத்து தொடர்பாக ஓட்டுநர்கள், உரிமையாளர்களின் புகார்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை பயன்படுத்தப்படும்.

Posted On: 03 MAY 2020 4:37PM by PIB Chennai

நாட்டில் ஊரடங்கின்போது மாநிலங்களுக்கு இடையே, காலி வாகனங்கள் உள்பட சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் புகார்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நோக்கத்துக்காக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக அதிகாரிகளும் அங்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கு தொடர்பாக எந்தவிதப் புகாராக இருந்தாலும், அதனை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தெரிவிப்பதற்கு வசதியாக, ஊரடங்குக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை எண் 1930 செயல்பட்டு வருகிறது. மேலும் ,தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பான குறைபாடுகளைத் தெரிவிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 1033 என்ற உதவி எண்ணும் உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்துத் துறைகள், போக்குவரத்து சங்கங்கள் ஆகியவை ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும். போக்குவரத்துத் துறை மற்றும் ஓட்டுநர்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைபாடுகளுக்குத் தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக அதிகாரிகள் உதவுவார்கள். இவ்வாறு பெறப்படும் புகார்கள் பற்றி இந்த அதிகாரிகள் தினசரி அறிக்கைகளைத் தயார் செய்வார்கள்.

ஊரடங்கின் போது மேற்கொள்ளப்படும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளின் படி நிர்வகிக்கப்படுகிறது.

வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து, வாகனங்கள் நிறுத்துமிடத்துக்குச் செல்லும் போதும், மாநிலங்களுக்கு இடையே காலி வாகனங்கள், சரக்கு வாகனங்களை இயக்கும் போதும் ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு இது தீர்வு வழங்குகிறது.

இந்தியாவில் கொவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் பற்றிய பிரச்சினைகளுக்கு இந்த நடைமுறை பெரிதும் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.



(Release ID: 1620679) Visitor Counter : 230