பாதுகாப்பு அமைச்சகம்
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான செயல்பாட்டில் போராடுபவர்களுக்கு ராணுவத்தின் சார்பில் மரியாதை
Posted On:
01 MAY 2020 9:52PM by PIB Chennai
ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எல். நரவனே, கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், விமானப் படை தலைமைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ். படாவ்ரியா ஆகியோரும் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அலுவலர்களின் முயற்சிகளுக்கு தலைமைத் தளபதி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், வரும் நாட்களில் தங்களுடைய ஆதரவு அவர்களுக்குத் தொடரும் என்று உறுதி அளித்தார்.
நோய்த் தொற்றைக் கையாள்வதில் இந்திய அரசு எடுத்து வரும் தீவிரமான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் அரசின் அறிவுறுத்தல்களை குடிமக்கள் தீவிரமாகப் பின்பற்றி வருவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த முயற்சிகள் காரணமாக, நோய்த் தாக்குதல் நிலை அதிகரிக்காமல் இருப்பதாகவும், உலக அளவில் பெரும்பாலான நாடுகளைவிட இந்தியாவில் நோய்க் கட்டுப்பாடு சிறந்த முறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனாவை எதிர்த்துப் போராடும் வீரர்களுக்குத் துணையாக தாங்கள் இருப்பதை வெளிக்காட்டும் வகையில் மே 3 ஆம் தேதி சில செயல்பாடுகளை ராணுவத்தினர் மேற்கொள்ள இருப்பதாக தலைமைத் தளபதி கூறினார். ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகர் முதல் திருவனந்தபுரம் வரையிலும், திப்ரூகார் முதல் கச் வளைகுடா வரையிலும் ராணுவத்தின் போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் பல நிகழ்வுகளில் பங்கேற்கும் என்று அவர் குறிப்பிட்டார். கோவிட் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது விமானப் படை ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கடற்படையும், கடலோரக் காவல் படையும் கப்பல்களை அலங்கார வடிவில் நிறுத்தும் என்றும், ராணுவ இசைக் குழுக்கள் கோவிட் மருத்துவமனைகளுக்குச் சென்று, கொரோனா வீரர்களுக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில், வெளியில் நின்று இசைப்பார்கள் என்றும் தலைமைத் தளபதி கூறினார்.
(Release ID: 1620372)
Visitor Counter : 204