பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குகளை விசாரிக்க புதிய வழிகாட்டுதல்கள்

Posted On: 02 MAY 2020 1:25PM by PIB Chennai

புதுடெல்லியில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தலைவரின் அறிவுறுத்தலின்படி, பின்வரும் அறிவிக்கை வெளியிடப் படுகிறது:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 24.03.2020 தேதியிட்ட உத்தரவுகள் மற்றும் அதைத் தொடர்ந்து 14.04.2020இல் இருந்து 03.05.2020 வரையிலான தேதிகளிடப்பட்ட நீட்டிப்பு உத்தரவுகளின் படி, முடக்கநிலை அமலில் இருப்பதால், நாடு முழுக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வின் செயல்பாடுகள், பல பகுதிகளில் உள்ள மற்ற அமர்வுகளின் செயல்பாடுகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  கோவிட்-19 நோய்த் தாக்குதலின் தீவிரத் தன்மையின் அடிப்படையில் சிவப்பு (நோய்த்தொற்று அதிகமிருக்கும் ஹாட் ஸ்பாட்கள்), ஆரஞ்சு, பச்சை மண்டலங்களை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து உள்துறை அமைச்சகம் 01.05.2020 தேதியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மண்டலங்களில் அனுமதிக்கப்படும் மற்றும் தடை செய்யப்படும் செயல்பாடுகள் பற்றியும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த சூழ்நிலை மாறுதல்களைக் கருத்தில் கொண்டு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பின்வரும் அறிவுறுத்தல்கள் அளிக்கப் படுகின்றன:

பச்சை மண்டலத்தில் உள்ள அமர்வுகள் / நீதிமன்றங்கள், தனி நபர் இடைவெளி யைக்கடைபிடித்தல், கிருமிநீக்க ஏற்பாடுகள் செய்தல், நேரடித் தொடர்புகளைத் தவிர்த்தல் குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள வழிகாட்டுகல்களைப் பின்பற்றி, செயல்படலாம்.

சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களைப் பொருத்த வரையில், அவசர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து, அந்தந்த அமர்வின் பதிவாளர்களைத் தொடர்பு கொண்டு இ-மெயில் மூலம் மனுக்கள் தாக்கல் செய்யலாம். இதற்கான இமெயில் முகவரி விவரங்களை, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அல்லது தரப்பாருக்கு, பதிவாளர் வழங்குவார்.

அதற்குப் பிந்தைய நடைமுறைகள் குறித்து முதன்மை அமர்வின் பதிவாளர் அலுவலகத்தின் ஆலோசனையுடன், அமர்வுகளின் தலைவர்களால் முடிவு செய்யப்படும். காணொளி மூலம் ஆஜராகும் நபர்கள் உரிய உடைகளை அணிந்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கண்ணியமாக உடை அணிந்திருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த ஏற்பாடு 17.05.2020 அல்லது மறு உத்தரவு வரும் வரையில் அமலில் இருக்கும்.



(Release ID: 1620365) Visitor Counter : 185