சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை பொது ஆதாரமாகவும், கட்டுப்படியான விலையில் கிடைக்கச் செய்யவும் உலகம் ஒன்றுபட வேண்டும் :மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

Posted On: 28 APR 2020 7:57PM by PIB Chennai

பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடலின் பதினோராவது அமர்வில், இந்தியா மற்றும் 30 இதர நாடுகள் கோவிட்-19 சூழலுக்குப் பின்னர் பொருளாதாரத்துக்கும், சமுதாயத்துக்கும் புத்துயிரூட்டுவதில் உள்ள சவால்களைச் சமாளிக்கத் தேவையான வழிவகைகள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளன. மிகவும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு அளிக்கும் அதேவேளையில், காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.  

பீட்டர்ஸ்பெர்க் காலநிலை மெய்நிகர் உரையாடலில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருவதாகவும், அதேபோல, காலநிலை தொழில்நுட்பம் பொது ஆதாரமாக கட்டுபடியான விலையில் கிடைக்கக் கூடியதாக நம்மிடம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

காலநிலை நிதி பிரச்சினை பற்றி வலியுறுத்திய திரு. ஜவடேகர், உலகத்துக்கு இப்போது அதிகத் தேவை உள்ளது என்றார். ’’ வளர்ந்து வரும் உலகத்துக்கு உடனடியாக ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மானிய உதவி கிடைக்க நாம் திட்டமிட வேண்டும் ‘’ என்று அவர் யோசனை தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் உலகத்துடன் இணைந்து இந்தியா செயல்படும் என்பதைத் தெரிவித்த மத்திய அமைச்சர், குறைந்த வசதிகளுடன் நாம் எப்படி உயிர் வாழமுடியும் என்பதை கொரோனா நமக்கு கற்பித்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் முதன்முதலாக எடுத்துரைத்தது போல, நீடித்த வாழ்க்கை முறைத் தேவைக்கு ஏற்ப, நீடித்த நுகர்வு முறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து உலகம் சிந்திக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறினார்.



(Release ID: 1619195) Visitor Counter : 265