மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து மாநிலங்கள் துணைநிலை மாநிலங்களின் முயற்சிகளுக்கு ரவி சங்கர் பிரசாத் பாராட்டு

Posted On: 28 APR 2020 9:30PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத்  ஏப்ரல் 28ம் தேதி அன்று காணொலிக் காட்சியின் மூலம் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில்  ஹரியானா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், பீகார், உத்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தகவல் தொழில்நுட்பத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர்கள் ஆகியோரும் பங்கேற்றனர். ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், கேரளா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப், அசாம், ஒடிசா, கோவா, நாகாலாந்து, மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். அனைத்து மாநிலங்கள், துணைநிலை மாநிலங்களின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்களும் இதில் பங்கேற்றனர். மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அஞ்சல் துறை, தொலைத் தொடர்புத் துறை ஆகியவற்றின் செயலாலர்களும் மூத்த அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில்  அனைத்து மாநிலங்கள், துணைநிலை மாநிலங்களின் முயற்சிகளையும் மாண்புமிகு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் பராட்டினர். இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் கீழ்க்கண்ட முக்கிய அறிவிப்புகளையும் அவர் செய்தார்:

  • வீட்டிலிருந்து பணி’ புரிவதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் கால அவகாசத்தை  ஏப்ரல் 30 ம் தேதியில் இருந்து ஜூலை 31ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டிக்கும்.
  • பாரத் நெட் திட்டத்தை ஆதரிக்குமாறு அவர் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார். மேலும் செயல் திறன்மிக்கதொரு தொலைத்தொடர்பு வலைப்பின்னலை வளர்த்தெடுக்க கடந்து செல்வதற்கான உரிமை குறித்த பிரச்சனைகளை ஆராயுமாறும் அவர் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் தாக்குதல் உருவாக்கியுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கிராமப்புறப் பகுதிகளில் டிஜிட்டல் முறையிலான கல்வி, சுகாதார சேவைகள் போன்றவற்றை வழங்குவதில் பாரத் நெட் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
  • இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற மாநிலங்களில் ஒன்றின் ஆலோசனைக்கிணங்க, கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் துணைநிலை மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கைகளை சேகரித்து அவற்றின் அடிப்படையில் ஓர் இணைய தளத்தை உருவாக்குமாறு மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
  • கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிந்தைய காலத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகள் மேற்கொள்ள வேண்டிய பாதையை வகுக்கும் வகையில் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட நடைமுறைத் தந்திரங்களுக்கான குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஒருவரின் ஆலோசனையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
  • டிஜிட்டல் முறையிலான கல்வி,  சுகாதார வசதிகள், பணம் செலுத்தல் போன்ற வசதிகளுடன் கூட சுயச்சார்புடையதாக ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்குவது என்ற தனது தொலைநோக்கு நிறைவடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
  • மாநிலங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அவர் ஆரோக்கிய சேது செயலியில் இருந்து பெறப்பட்ட தரவுகளை மாநிலங்களில் உள்ள மாவட்ட அளவிலான அதிகாரிகள் மட்டம் வரை இணையத்தின் மூலம் பெறும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யுமாறும் உத்தரவிட்டார். மேலும் தனிச்சிறப்புகளைக் கொண்ட கைபேசிகளைப் பயன்படுத்துவோருக்கும் இத்தகைய தீர்வு உருவாக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அது வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மின்னணுவியல் பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்கான நல்லதொரு வாய்ப்பினை இந்தியா பெறவிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், தங்களது மாநிலங்களில் இதற்கான முதலீடுகளை கவர்ந்திழுக்கும் பணிகளில் இறங்க வேண்டுமென்றும் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார்.



(Release ID: 1619194) Visitor Counter : 233