பிரதமர் அலுவலகம்

கோவிட்-19 தொடர்பாக திட்டமிடலுக்கு முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

முடக்கநிலை அமலுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன கடந்த 1.5 மாதங்களில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளது: பிரதமர்

துரிதமான செயல்பாடு என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும் `இரண்டு கஜ தூரம்' என்ற மந்திரத்தைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்

சிவப்பு மண்டலப் பகுதிகளை ஆரஞ்சு மண்டலமாக மாற்றி, பிறகு அதை பச்சை மண்டலமாக மாற்றும் நோக்கில் மாநிலங்களின் முயற்சி இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்

நாம் தைரியமாக செயல்பட்டு, சாமானிய குடிமக்களின் வாழ்வுக்கு உதவும் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்: பிரதமர்

பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதே சமயத்தில் கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடர வேண்டும்: பிரதமர்
கொரோனா வைரஸ் தாக்குதலின் தாக்கம் அடுத்து வரும் மாதங்களிலும் இருக்கும், முகக்கவச உறைகள், முகத்தை மூடும் துணிகள் வாழ்வின் அங்கமாக மாறிவிடும்: பிரதமர்

கருத்துகளைத் தெரிவித்த முதலமைச்சர்கள், பொருளாதார சவால்களை சமாளிக்கவும், சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஆலோசனைகளும் வழங்கினர்

Posted On: 27 APR 2020 1:48PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் மாறி வரும் சூழ்நிலைகள் பற்றியும், சூழ்நிலையைக் கையாள்வது பற்றியும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு காணொளி மூலம் முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு மார்ச் 20, ஏப்ரல் 2, ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.

முடக்கநிலை அமல் செய்யப்பட்டதால் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், கடந்த ஒன்றரை மாத காலத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை நம்மால் காப்பாற்ற முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். பல நாடுகளின் ஒட்டு மொத்த மக்கள் தொகை அளவுக்கு, அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக அவர் கூறினார். மார்ச் மாத ஆரம்பத்தில் இந்தியா உள்பட பல நாடுகளில் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. இருந்தபோதிலும், இந்தியாவில் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, நம்மால் நிறைய உயிர்களைப் பாதுகாக்க முடிந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த வைரஸ் பாதிப்பின் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை என்று கூறிய அவர், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இப்போது வரை நாட்டில் இரண்டு முடக்கநிலைகள் அமல் செய்யப்பட்டுள்ளன. இரண்டிலும் சில அம்சங்கள் மாறுபட்டுள்ளன, இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். வரக் கூடிய மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். `இரண்டு கஜ தூர இடைவெளி' என்ற மந்திரத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அடுத்த வரும் நாட்கள் முகக்கவச உறைகள் மற்றும் முகத்தை மூடும் துணிகள் நம் வாழ்வின் அங்கமாகிவிடும் என்று கூறினார். இந்தச் சூழ்நிலையில், துரிதமான செயல்பாடு என்பது தான் எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தங்களுக்கு இருமல் மற்றும் சளி அல்லது வேறு அறிகுறிகள் இருந்தால் மக்கள் தாங்களாகவே அதைத் தெரிவிக்கிறார்கள் என்று கூறிய அவர், அது வரவேற்க வேண்டிய விஷயம் என்று தெரிவித்தார்.

நமது பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் தருவதுடன், கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். முடிந்த வரையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். சீர்திருத்த முயற்சிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் முயற்சிகளை பலப்படுத்தும் வகையில் நிறைய பேர் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ``நாம் தைரியமாக இருக்க வேண்டும். சாமானிய மக்களின் வாழ்வுக்குத் தேவையான வகையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்'' என்று பிரதமர் திரு. மோடி கூறினார். நோய்த் தாக்குதலை சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்கவும், புதுமைச் சிந்தனை ஆராய்ச்சிகளைப் பலப்படுத்தவும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

நோய்த் தாக்குதல் அதிகமாக உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் - சிவப்பு மண்டலப் பகுதிகளில் - அரசின் வழிகாட்டுதல்களைக் கடுமையாகப் பின்பற்றுவதற்கு மாநிலங்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சிவப்பு மண்டலங்களை, ஆரஞ்சு மண்டலங்களாக மாற்றி, பிறகு அவற்றை பச்சை மண்டலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருவது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திவிடாத வகையிலும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆபத்தான எந்த சூழ்நிலையும்  ஏற்பட்டுவிடாத வகையிலும், இந்தப் பணிகளை செய்ய வேண்டியுள்ளது என்று கூறினார். பருவ மாற்றம் குறித்து - கோடை மற்றும் பருவமழை வருகை - மாநில முதல்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற பருவங்களில் வரக் கூடிய நோய்கள் பற்றி அறிந்து அதற்காக முன்கூட்டியே திட்டங்களை உருவாக்கிக் கொள்ளுமாறு திரு. மோடி யோசனை தெரிவித்தார்.

அதிகபட்ச எண்ணிக்கையில் மக்கள் காப்பாற்றப் படுவதை உறுதி செய்வதற்கு, முடக்கநிலை அமல் விதிகளை தீவிரமாக அமல் செய்ய வேண்டியதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் பிரதமரின் தலைமைத்துவத்துக்கு முதல்வர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் முதலமைச்சர்கள் எடுத்துக் கூறினர். சர்வதேச எல்லைகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பொருளாதார சவால்களை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது குறித்தும், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் முதலமைச்சர்கள் பேசினர். கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் காவல் துறையினரும், மருத்துவ அலுவலர்களும் அற்புதமான சேவை செய்து வருவதாக முதலமைச்சர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


(Release ID: 1618661) Visitor Counter : 300