நிதி ஆணையம்

பதினைந்தாவது நிதிக் குழு அதன் ஆலோசனைக் குழுமத்துடன் ஆலோசனை

Posted On: 24 APR 2020 7:01PM by PIB Chennai

பதினைந்தாவது நிதிக் குழு அதன் ஆலோசனைக் குழுமத்துடன் ஏப்ரல் 23, 24 தேதிகளில் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தியது. இந்தக் குழு இப்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மார்ச் மாதத்திற்கு  முன்னதாக மதிப்பீடு செய்யப்பட்ட உண்மையான ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகித அளவை மீண்டும் முழுமையாக மறு ஆய்வு செய்து, அதைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்பதை, ஆய்வில் கலந்து கொண்ட அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். பொதுமுடக்க நிலை நீக்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் படிப்படியாகத்தான் மீட்சி பெறும். தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புதல், உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் நிலையை சரி நிலைப் படுத்துதல், பணப் புழக்கம் மற்றும் உற்பத்திப் பொருட்களை வாங்கும் திறன் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இவை இருக்கும். எனவே கோவிட் 19 தொற்று தாக்கத்தால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தின் அளவு காலப்போக்கில் தான் தெளிவாகத் தெரியும்.

அரசு நிதிகள் விஷயத்தில் இதன் தாக்கத்தை உறுதியாக மதிப்பிட முடியாது என்றாலும், கணிசமான பாதிப்பு நிச்சயமாக இருக்கும் என்று ஆலோசனைக் கவுன்சில் தெரிவித்தது. பொருளாதாரத்தை சீர்படுத்த அரசு செலவினங்களில் பல்வேறு யோசனைகளை ஆலோசனைக் கவுன்சில் வழங்கியது. பின்வரும் ஆலோசனைகள் முக்கியமானவையாக இருக்கும் என்று அந்தக் கவுன்சில் கூறியது.

 

  1. கோவிட் பாதிப்பு வருவதற்கு முன்பே சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதிச் சிக்கல் இருந்தது. அந்த நிறுவனங்களின் செயல்பாடும், பணப் புழக்கமும் பாதிக்கப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அவற்றுக்கு உதவிகரமான ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டியது முக்கியம்.
  2. மந்த நிலை காரணமாக வங்கிச் சேவை அல்லாத நிதி நிறுவனங்களும் பாதிக்கப் பட்டுள்ளன. திவால் நிலை ஏற்படுதலையும், நிதித் துறையில் வாராக்கடன் அதிகரிப்பையும் தவிர்க்க, பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பகுதியளவு கடன் உத்தரவாதம் போன்ற நடவடிக்கைகள் இதில் உதவிகரமாக இருக்கும். நிதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பதை உறுதி செய்வதில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு முக்கிய பங்கு இருக்கும்.
  3. மத்திய, மாநில அரசுகளின் நிதி நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். இப்போதைய நிலையில், கடனுக்கான வழிமுறைகள் மற்றும் அமலாக்க விதிகள், பணப்புழக்க மாறுபாடுகளை அரசு கையாள முடியும். வரும் நாட்களில் கூடுதல் பற்றாக் குறைக்கு நிதிவசதி அளிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளுக்குப் போதிய நிதி கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது முக்கியம்.

வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு நிலைகளில் இந்த நோய்த் தாக்குதலின் தாக்கத்தில் இருந்து மீட்சி பெற வாய்ப்புள்ளதாக கவுன்சில் கருதுகிறது. எனவே, வெவ்வேறு மாநிலங்களுக்கான மீட்சி செயல்பாடுகள் வெவ்வேறு வேகத்தில் நடைபெறும்.



(Release ID: 1618131) Visitor Counter : 171