பிரதமர் அலுவலகம்

அயர்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்

Posted On: 22 APR 2020 7:05PM by PIB Chennai

அயர்லாந்து பிரதமர் டாக்டர் லியோ வரத்கருடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார். அப்போது, கோவிட்-19 தொற்று பரவல் நிலை மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக இரு நாடுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அயர்லாந்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முக்கிய பங்காற்றி வருவதற்கு பிரதமர் வரத்கர் வரவேற்பு தெரிவித்தார். அயர்லாந்தில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மீது கவனமும், ஆதரவும் தெரிவித்துவருவதற்காக பிரதமர் வரத்கருக்கு திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். அதேபோல, இந்தியாவில் இருக்கும் அயர்லாந்து மக்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

உலக அளவில் கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தங்களது பங்களிப்பை செய்யும் வகையில், மருந்து மற்றும் மருத்துவத் துறைகளில் தங்களது பலத்தை இந்தியாவும், அயர்லாந்தும்  அதிகரிப்பது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கோவிட்-19 பரவலுக்குப் பிந்தைய சூழலில், அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த நெருக்கடியால் பல்வேறு வழிகளிலும் ஏற்படும் சூழல்கள் குறித்து இரு நாடுகளும் தொடர் ஆலோசனை நடத்துவது என தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

***



(Release ID: 1617424) Visitor Counter : 195