சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று சூழ்நிலையில் கொள்ளை நோய்கள் சட்டம் 1897ல் திருத்தம் செய்வதற்கான அவசரச் சட்டம் பிரகடனம்

Posted On: 22 APR 2020 10:14PM by PIB Chennai

தற்போதைய கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் சேவையாற்றி வரக் கூடிய சுகாதார சேவைத் துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல்கள் நடத்தி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. மருத்துவத் துறையினர் ஓய்வில்லாமல், நாள் முழுக்க உழைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றி வரும் நிலையிலும், அவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதாகக் கருதி எளிதில் தாக்குதலுக்கு ஆளாகும் நபர்களாகவும் துரதிருஷ்டவசமாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் மீது தவறான முத்திரை குத்தப்பட்டு, சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு, சில சமயங்களில் தேவையில்லாமல் வன்முறை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள், அதிகபட்ச சேவையை ஆற்ற முடியாமல் மருத்துவத் துறையினருக்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது, அவர்களுடைய நம்பிக்கையை பராமரிப்பது சிரமமாக இருக்கிறது. சுகாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுடைய சேவை முக்கியமானதாக இருக்கிறது. சுகாதார சேவையில் ஈடுபட்டிருப்போர், பாரபட்சம் ஏதுமின்றி கடமையாற்ற வேண்டியது கட்டாயம் என்றாலும்கூட, அவர்களை பணி செய்ய ஊக்குவிப்பதற்கும், நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், சமூகத்தின் தரப்பில் இருந்து ஒத்துழைப்பும் ஆதரவும் தர வேண்டியது அடிப்படைத் தேவையாக இருக்கிறது.

டாக்டர்கள் மற்றும் பிற மருத்துவ அலுவலர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க கடந்த காலத்தில் பல மாநிலங்களில் சிறப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பணியில் களத்தில் முன் நின்று பணியாற்றுபவர்களுக்கு எதிராக தனித்துவமான அடக்குமுறை செயல்பாடுகள் காணப்படுகின்றன. அனைத்து தரப்பிலும் இந்த துவேஷ செயல்பாடுகள் காணப்படுகின்றன. மயானங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற எதிர்மறை செயல்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றை உள்ளடக்கியதாக மாநிலங்களின் இப்போதைய சட்டத்திற்கு வரம்புகள் இல்லை. பொதுவாக உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவது பற்றி மட்டுமே அந்த சட்ட விதிகள் கூறுகின்றன. வீடு மற்றும் பணியிடங்களில் துன்புறுத்தல் செயல்பாடுகள் அவற்றின் வரம்பில் வரவில்லை. மேலும், கலக எண்ணத்துடன் செயல்படுபவர்களைத் தண்டிக்கப் போதுமான அளவிற்கு கடுமையான சட்ட விதிகள் அவற்றில் இல்லை.

இந்தச் சூழ்நிலையில், கொள்ளைநோய்கள் சட்டம் 1897-ல் திருத்தம் செய்வதற்கு அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவ சேவை அலுவலர்கள் மற்றும் அவர்களுடைய வசிப்பிட / பணியிட வளாகங்களில் உள்ள சொத்துகளை கொள்ளை நோய் தாக்குதல் காலத்தில் வன்முறைகளில் இருந்து காப்பாற்றும் நோக்கில் இந்த அவசரச் சட்டம் பிரகடனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்தை அமல் படுத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மருத்துவ அலுவலர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவதை தண்டனைக்குரிய ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்வதற்கானதாக இந்த அவசரச் சட்டம் இருக்கும்.

இப்போதுள்ள நோய்த் தொற்று போன்ற எந்தவொரு சூழ்நிலையிலும், சுகாதார சேவையில் உள்ளவர்களுக்கும், அவர்களுடைய சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த அவசரச் சட்டத்தின் பிரிவுகள் உள்ளன. சாமானிய மக்கள், மருத்துவத் துறையினரின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, கடந்த மாதத்தில் பல முறை நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.  இருந்தபோதிலும், சில வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால், மருத்துவத் துறையினர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவசர சூழ்நிலைகளில் சேவையாற்றும்போது, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்குக் கடுமையான விதிகளுடன் கூடிய தனிப்பட்ட ஒரு சட்டம் தேவை என்று கருதப்பட்டது.

மருத்துவ அலுவலர்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உடல் ரீதியாக காயம் ஏற்படுத்தினாலோ, அவர்கள் பொறுப்பில் இருக்கும் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ வன்முறை என்ற வரம்பில் வரும் என்று இந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பொது மற்றும் கிளினிக்கல் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், துணை மருத்துவ அலுவலர்கள், சமுதாய சுகாதார ஊழியர்கள் ஆகியோர் சுகாதார சேவை அலுவலர்கள் என்ற வரம்பில் வருகிறார்கள்; இந்தச் சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்ட மற்றவர்கள், நோய் பரவலைத் தடுத்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பிற அலுவலர்கள் என்ற வரம்பில் வருகிறார்கள்; மாநில அரசால் அதிகாரப்பூர்வ கெஜட்டில் அறிவிக்கை செய்யப்படும் வேறு அலுவலர்களும் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள்.

மருத்துவ மையம், தனிமைப்படுத்தல் மையம், நோயாளிகளை தனிமைப்படுத்தலுக்கான பகுதி, நடமாடும் மருத்துவ வாகனங்கள் மற்றும் சாதனங்கள், நோய்த் தொற்று தொடர்பாக மருத்துவ சேவை அலுவலர்கள் நேரடியாக பயன்படுத்தும் வேறு எந்த சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துவது தண்டனைக்குரிய பிரிவுகளின் கீழ் வரும்.

இதுபோன்ற வன்முறைகள் தண்டனைக்குரிய, ஜாமீனில் வெளியில் வர முடியாத விதிகளின் கீழ் கைது செய்யக் கூடிய குற்றச் செயலாகக் கருதப்படும். இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுவோர் அல்லது துணையாக இருந்து தூண்டிவிடுவோருக்கு 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கப்படும். பலத்த காயம் ஏற்படுத்தி இருந்தால், 6 மாதங்கள் முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு, குற்றவாளி நஷ்டஈடு தருவதுடன், சேதமடைந்த பொருள்களின் சந்தை மதிப்பைப் போல இரு மடங்கு அபராதமும் செலுத்த வேண்டும்.

இதுபோன்ற குற்றச் செயல்களை ஆய்வாளர் அந்தஸ்துக்கும் குறைவில்லாத பதவியில் இருக்கும் அதிகாரி 30 நாட்களுக்குள் விசாரித்து முடிப்பார். விசாரணையை நீதிமன்றமே ஏதாவது காரணத்தால் எழுத்துபூர்வமாகப் பதிவு செய்து நீட்டித்தால் தவிர, ஓராண்டு காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

இப்போதைய கோவிட்19 நோய்த் தாக்குதல் சூழ்நிலையில், அரசின் தலையீடுகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசே நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும், நாட்டுக்குள் வரும் அல்லது வெளியில் செல்லும் வாகனங்களை ஆய்வு செய்யும் வரம்பில் சாலை, ரயில், கடல் மற்றும் வான்வழி வாகனங்களை உள்ளடக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார சேவை பணியாளர்களும், களப் முன் பணியாளர்களும் கோவிட்-19 தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்குத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற, தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தத் தருணத்தில் அவர்களுக்கு நாம் அதிகபட்ச மரியாதை செலுத்தி, ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கக் கூடாது. மருத்துவத் துறையினரிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இந்த அவசரச் சட்டம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இப்போதைய கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பின், மிகவும் மோசமான சூழ்நிலையில், மருத்துவத் துறையினர் தொடர்ந்து அரும்பணியாற்றி மனிதகுலத்திற்கு சேவை செய்ய இந்த அவசரச் சட்டம் உத்வேகம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

*****


(Release ID: 1617418) Visitor Counter : 773