சுற்றுலா அமைச்சகம்
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில், லடாக்கின் செழுமையான பாரம்பரியம், ‘தேக்கோ அப்னா தேஷ்’ இணையதள தொடர்களின் வரிசையில் 5வது இணையதளக் கருத்தரங்கில் விவரிக்கப்பட்டது
Posted On:
21 APR 2020 9:19PM by PIB Chennai
இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கான பயணங்களை ஊக்குவிக்கவும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில் நம்முடைய தேசத்தைக் காணுங்கள் - ‘தேக்கோ அப்னா தேஷ்’ என்ற இணையதளத் தொடர் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நாட்டின் செழுமையான பாரம்பரியம் குறித்த தகவல்களும், இந்தியாவில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய விரிவான விவரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்தத் தொடர் கருத்தரங்கு வரிசையில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், ‘லடாக்: வெளிவராததை வெளிக்கொணர்வது’ என்ற தலைப்பில், செழுமையான பாரம்பரியம் கொண்ட லடாக் பற்றி 5வது இணையதளக் கருத்தரங்கு, 2020ஐ ஏப்ரல் 20இல் நடத்தியது.
இந்தக் கருத்தரங்கில், சர்வதேச இமயமலை மலையேற்றக் குழுவைச் சேர்ந்த பராஸ் லூம்பா மற்றும் ஜெய்தீ்ப் பன்சால் ஆகியோர், லடாக் பற்றிய புகைப்படங்களுடன் அந்த நகரம் மற்றும் உயரமான கணவாய்ப் பகுதிகள் மற்றும் லடாக்கில் வெளியுலகத்திற்கு தெரியாத பகுதிகள் ஆகியவற்றை பற்றி விளக்கினர். மேலும், அவர்கள் லடாக்கின் பாரம்பரிய வீடுகளில் தங்கும் நடைமுறைகள் மற்றும் லடாக் பயணத்தின் போது தேவையான நீடித்த மற்றும் சூழலுக்கு உகந்த நட்புறவு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
ஆரம்பத்தில் லே நகரில் இருந்து அவர்கள் தங்கள் காட்சிப் பயணத்தைத் தொடங்கினர். ஹெமிஸ் தேசியப்பூங்கா, மர்கா பள்ளத்தாக்கு, நீண்ட நூபுரா பள்ளத்தாக்கு ஆகியவற்றின் அழகு பற்றியும், இந்தியாவின் கடைசி கிராமங்களான தர்துக், வார்ஷி பற்றியும் அவர்கள் விளக்கினர். செல்லும் வழியில் இருக்கும் புராதன மடாலயங்கள், புனித ஏரிகள் ஆகியவை பற்றியும் அவர்கள் விளக்கினர்.
நூபுராவில் இருந்து லே பிராந்தியத்தின் பெரும் பகுதியையும், லிங்செட்டின் டிரான்ஸ்-சிங்லா பள்ளத்தாக்கு, 15ம் நூற்றாண்டு மடாலாயம் மற்றும் இந்தியாவின் பழங்குடியினரான புரோக்பா இனத்தினரின் கடைசி குடியிருப்புகளான தா, ஹனு ஆகியவற்றை பற்றியும் பேச்சாளர்கள் விளக்கினர்.
இந்தக் கருத்தரங்களில் பேச்சாளர்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு கிடைத்தது. சுமார் 4,600 பேர் இந்தக் கருத்தரங்கிற்குப் பதிவு செய்து இருந்தனர். மேலும், 78 சதவீதம் பார்வையாளர்கள், இந்தக் கருத்தரங்கு மிகச் சிறப்பாக இருந்ததாக கருத்து வெளியிட்டிருந்தனர்.
(Release ID: 1617028)
Visitor Counter : 135