பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட, கிராம அளவில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளன
प्रविष्टि तिथि:
21 APR 2020 12:44PM by PIB Chennai
நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட, கிராம அளவில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
ராமநகரா மாவட்டம், கனகாபுரா தாலுகாவைச் சேர்ந்த உய்யம்பள்ளி கிராமப் பஞ்சாயத்து, மக்களுக்கு முதல்கட்ட சோதனைகளை நடத்த ஆஷா பணியாளர்களுக்கு வெப்பமானிகளை வழங்கியுள்ளது.
தெலங்கானாவில், மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், கிராமக் கொள்முதல் மையங்களில் முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளனவா என்பதைக் கண்டறிய திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். யடாத்ரி, பைன்சா மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, சோதனையிட்டதுடன், உணவு தானியக் கொள்முதல் நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படும் என விவசாயிகளுக்கு உறுதி அளித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டம் ஹரா கிராமத்தின் பெண் தலைவர், அந்தப் பஞ்சாயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக உள்ளன. கொவிட்-19 பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றி, வீடு, வீடாகச் சென்று அவர் மக்களிடம் பிரச்சாரம் செய்தார். தனக்கு தேவையான முகக்கவசங்களை அவரே தைத்துக்கொண்டார். மற்ற கிராமங்களுக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் மூடிய அவர், தங்கள் கிராமத்துக்குள் நுழையும் இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்தார். அவரது மேற்பார்வையில், கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் தனிமைப்படுத்துதல் வார்டாக மாற்றப்பட்டது.
கின்னாவூர் மாவட்டம் துனி பஞ்சாயத்தின் மகளிர் மண்டலப் பெண்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்து முகக்கவசங்களைத் தைத்து வருகின்றனர். இந்தப் பெண்கள் தினசரி 200-க்கும் அதிகமாக முகக்கவசங்களைத் தயாரித்து, அவற்றைப் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக, ஏழைத் தொழிலாளர்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதே மாவட்டத்தில் உள்ள ரோபா பள்ளத்தாக்கின் கோபாங்க் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பொது இடங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியையும், ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தீவிரமாகப் பின்பற்றும்படி மக்களுக்கு பஞ்சாயத்து தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறது.
(रिलीज़ आईडी: 1616738)
आगंतुक पटल : 245