வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சண்டிகர் நகரில் கழிவுகளைச் சேகரிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ஜிபிஎஸ்சுடன் கூடிய கடிகாரம், வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்டறியும் வசதிகள்

Posted On: 20 APR 2020 4:51PM by PIB Chennai

சண்டிகரில் முதல் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, நகரில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் சிவிடி செயலி மூலம் கையாளப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து, குப்பைக் கழிவுகளைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்காக, 15 வாகனங்களும், பிபிஇ கவச உபகரணங்களுடன் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, தலா ஒரு மேற்பார்வையாளர் வீதம் கண்காணிக்கப்படுகின்றன.

கழிவு சேகரிப்பு வாகனங்களின் ஓட்டுநர்கள் அனைவரும் மின்னணு- மனிதவள பின்தொடர் திட்டத்தின் கீழ் ஜிபிஎஸ்சுடன் கூடிய ஸ்மார்ட் கடிகாரங்களை அணிந்துள்ளனர். இந்த ஸ்மார்ட் கடிகாரங்கள் மூலம் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து நடமாட்டம் கண்டறியப்படுகிறது. இந்தக் கண்காணிப்பின் முக்கிய நோக்கம் தனிமைப்படுத்தப்பட்ட எந்த வீடும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதாகும்.

அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் பின்தொடர்வதற்கான கைபேசி செயலியை சண்டிகர் மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. ஆதாரங்களைப் பயன்படுத்துவதையும், பொருட்களை கிராமங்கள் மற்றும்  அந்தந்த பகுதிகளுக்கு சிறந்த முறையில் அளிப்பதையும் கண்காணிக்க இது பயன்படுகிறது. முன்னதாக, வாகனங்கள் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டன.

பல்வேறு பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ஓட்டுநர்களுடன் கூடிய வாகனங்களை சண்டிகர் மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது.



(Release ID: 1616492) Visitor Counter : 227