உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

நாடு முழுவதும் மருத்துவப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உயிர்காக்கும் உதான் திட்டத்தின் கீழ் 274 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

Posted On: 18 APR 2020 1:09PM by PIB Chennai

கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு உதவும் வகையில் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு இன்றியமையாத மருத்துவப் பொருள்களை எடுத்துச் செல்ல ”உயிர் காக்கும் உதான்” திட்டத்தின் கீழ் விமானங்களை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இயக்கி வருகிறது.  உயிர்காக்கும் உதான் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் மொத்தமாக 274 விமானங்களை இயக்கியுள்ளன. இதில் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் இரண்டும் 175 விமானங்களை இயக்கியுள்ளன.  இதுவரை ஏற்றிச் சென்ற சரக்குகளின் அளவு 463.15 டன் ஆகும்.  இன்றுவரை உயிர் காக்கும் உதான் விமானங்கள் பயணித்த வான்வழித் தொலைவு 2,73,275 கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ளது.

மையம் – ஆரம் (hub and spoke model) என்ற மாதிரியில் உள்நாட்டு உயிர்காக்கும் உதான் விமானங்கள் இயக்கப்படுகின்றன.  புதுதில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கௌகாத்தியில் சரக்கு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. உயிர்காக்கும் உதான் விமானங்கள் இந்தச் சரக்கு மையங்களை திப்ரூகர், அகர்தலா, அய்ஜ்வால், திமாப்பூர், இம்ப்பால், ஜோர்ஹாத், லெங்க்புய், மைசூரூ, நாக்பூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், புவனேஷ்வர், ராய்ப்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், போர்ட்பிளேர், பாட்னா, கொச்சின், விஜயவாடா, அகமதாபாத். ஜம்மு, கார்கில், லடாக், சண்டிகர், கோவா, போபால் மற்றும் பூனா ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களோடு (ஆரங்கள்) இணைக்கின்றன.  இந்தத் திட்டத்தின் கீழ் வடகிழக்குப்பிராந்தியம், தீவுப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் தரப்படுகிறது.  ஜம்மு & காஷ்மீர், லடாக், வடகிழக்கு மற்றும் இதர தீவுப்பகுதிகளுக்காக ஏர் இந்தியாவும் இந்திய விமனப்படையும் ஒருங்கிணைந்து முதன்மையாக பணியாற்றுகின்றன.

கிருஷி உதான் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா தனது இரண்டாவது விமானத்தை மும்பை – ஃபிராங்க்பர்ட்டுக்கு இடையில் 15 ஏப்ரல், 2020 அன்று இயக்கியது. இந்த விமானம் ஃபிராங்க்பர்ட்டுக்கு 27 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்த போது 10 டன் அளவிற்கு பொதுவான சரக்குகளை எடுத்து வந்தது.  ஏர் இந்தியா தனது முதலாவது கிருஷி உதான் விமானத்தை 13 ஏப்ரல் 2020 அன்று மும்பைக்கும் லண்டனுக்கும் இடையில் இயக்கியது.  லண்டனுக்கு 28.95டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்த போது 15.6 டன் அளவிற்கு பொதுவான சரக்குளை எடுத்து வந்தது.  தேவைகளுக்கு ஏற்ப இன்றியமையாத மருத்துவப் பொருள்களை இதர நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்காக ஏர் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட கால நிரலின்படி சரக்கு விமானங்களை இயக்கத் தயாராக உள்ளது.  ஏர் இந்தியா இத்தகைய முதல் விமானத்தை 15 ஏப்ரல் 2020 அன்று தில்லி – செஷல்ஸ் – மொரீஷியஸ் – தில்லி தடத்தில் இயக்கியது.  இந்த விமானத்தில் செஷலஸ்க்கு 3.4 டன் மருந்துப் பொருள்களும் மொரீஷியசுக்கு 12.6 டன் மருந்துப் பொருள்களும் எடுத்துச் செல்லப்பட்டன

****



(Release ID: 1615748) Visitor Counter : 218