தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம் கல்விப் பாடங்கள் / மெய்நிகர் வகுப்புகள்

Posted On: 16 APR 2020 10:02PM by PIB Chennai

 

முடக்கநிலை அமலில் உள்ள இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்களுக்குக் கல்வி அளிப்பதில் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. பல்வேறு மாநில அரசு கல்வி நிலையங்களின் ஒத்துழைப்புடன், நாடு முழுக்க தங்களுக்குள்ள பிராந்திய தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் யூடியூப் சேனல் மூலமாகவும் கல்விப்பாடங்களை அளிப்பதுடன் மெய்நிகர் வகுப்புகளுக்கும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது.

பள்ளிக்கூட வகுப்புகள் இல்லாத நிலையில், லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்வோருக்கு, பள்ளி இறுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நிலையில் உள்ளவர்களுக்கு மெய்நிகர் வகுப்புகள் மிகவும் உதவிகரமாக உள்ளன.

நிகழ்ச்சி அம்சம்

தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மெய்நிகர் கற்றல் திட்டத்தில், ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. பாடங்கள் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி கேள்வித்தாள்களையும் சில மாநிலங்கள் அளித்துள்ளன. மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கு, இதில் பல வகுப்புகள் உதவிகரமாக இருக்கும்.

தூர்தர்ஷன்

கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஜம்மு காஷ்மீர் தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிலையங்கள் மூலம் இப்போது மெய்நிகர் வகுப்புகள் நடைபெறுகின்றன.

அகில இந்திய வானொலி

விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர், புதுச்சேரி, மதுரை, திருவனந்தபுரம், திருநெல்வேலி, பனாஜி, ஜல்கான், ரத்னகிரி, சாங்லி, பர்பானி, அவுரங்காபாத், புனே, நாக்பூர், மும்பை, காங்க்டாக், குவாஹாட்டி, பிக்கானிர், உதய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்ப்பூர் வானொலி நிலையங்கள் மூலமாக மெய்நிகர் வகுப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன.

போபால், சென்னை, கோழிக்கோடு, திருச்சூர் வானொலி நிலையங்கள் மூலம் கல்விப் பாடத் திட்டங்கள் ஒலிபரப்பாகின்றன.

சராசரியாக ஒவ்வொரு தூர்தர்ஷன் சேனலும் தினமும் 2.5 மணி நேரம் கல்விக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு நிலையமும் தினமும் 30 நிமிடங்கள் கல்வி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்கின்றன.

தூர்தர்ஷன் நெட்வொர்க் மூலம் தினமும் மொத்தம் 17 மணி நேரமும், அகில இந்திய வானொலி மூலம் தினமும் 11 மணி நேரமும் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.

 



(Release ID: 1615294) Visitor Counter : 341