சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

``இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்வோம்'' - டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்

Posted On: 15 APR 2020 8:20PM by PIB Chennai

 

உலக சுகாதார அமைப்பின் (WHO) மூத்த அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்களுடனும், மத்திய மாநில அரசுகளின் சுகாதார அலுவலர்களுடனும், கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்  குறித்து, காணொளிக் காட்சி மூலம் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று கலந்துரையாடினார்.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளுக்குப் பாராட்டு தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், ``நெருக்கடியான காலக்கட்டத்தை நாம் சந்தித்திருக்கிறோம். போலியோ மற்றும் தட்டம்மையை ஒழித்ததைப் போல இந்த வைரசையும் ஒழிப்பதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்'' என்று கூறினார். ``இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்வோம்'' - என்று அவர் கூறினார். பணிகளுக்கு அதிக பயன் கிடைப்பதற்காக, கள அளவில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பலப்படுத்துவது மற்றும் ஒன்றுபட்டு செயல்படுவது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

``அரசு மருத்துவர்களும், உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்களும் போலியோ ஒழிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டியதையும்,  அதற்காக அவர்கள் நிறைய பங்களிப்பு செய்ததையும் நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அவர்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் போலியோவை ஒழிப்பதற்கு அதிக அவகாசம் தேவைப்பட்டிருக்கும்' என்று அவர் கூறினார்.

``கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இந்தியா தான் முதலில் நடவடிக்கை எடுத்தது. உலகின் மற்ற நாடுகளைவிட இப்போது இந்தியா முன்னணியில் உள்ளது. இதற்கு கொரோனா எதிர்ப்பு வீரர்கள் தான் காரணம்'' என்று அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

கோவிட்-19 நோய்த்தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநர் டாக்டர் கேட்ரபால் சிங், ``பெரிய மற்றும் பன்முக சவால்கள்  இருந்தபோதிலும், இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான போரில், தடுமாற்றம் இல்லாத உறுதிப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தி வருகிறது'' என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

  • நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு மைக்ரோ திட்டங்களை உருவாக்குதல் மற்றும் தொகுப்பு நோய்த் தடுப்புக்கு மாவட்ட அளவில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளுடன் கூட்டாக சேர்ந்து முயற்சிகள் மேற்கொள்வது.
  • நோய் எப்படி பரவுகிறது என்பதை அடையாளம் காண்பதற்கு, இப்போதைய பாதிப்புகள் குறித்த பகுப்பாய்வில் உதவியாக இருத்தல்.
  • மாவட்டங்களில் இனிமேலும் இந்த நோய் பரவுதலுக்கு வாய்ப்பில்லை என்று நம்பகமான ஆதாரம் கிடைக்கும் வரையில், மாவட்டங்களில் தொடர்ந்து கண்காணிப்பதற்கான உத்தியை உருவாக்க உதவுதல்.

 



(Release ID: 1614921) Visitor Counter : 239