இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்,

Posted On: 13 APR 2020 7:31PM by PIB Chennai

மக்கள்தொகை அதிகம் மிகுந்த பகுதிகளில் கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இவை, கழிப்பறைகள், துவைக்கும் இடங்கள், குளியலறைகள் ஆகியவற்றை பலர்  பகிர்ந்துக் கொள்ளும் இடங்களுக்கானவை.

 

இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம், சுத்தத்தையும், சுகாதாரத்தையும் மேம்படுத்துவதற்கானவை. மேலும், இவை நோய் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முக்கிய ஆலோசனைகளாகும்.

 

இதுபோன்ற மக்கள் வாழும் பகுதிகளில், உடனடியாக செய்யப்பட வேண்டியது:  இங்கு குடியிருப்பவர்களிடம் அடிக்கடி கையை கழுவும் பழக்கத்தை கொண்டு வருவதுதான். இதற்காக மக்கள் தாங்களாகவே கையை கழுவும் இடங்களை மிக விரைவாக நிறுவப்பட வேண்டியதற்கான வழிமுறைகள் இந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொள்ளைநோய் சமயங்களில் இதுபோன்றுதான் கைகழுவும் இடங்கள் அமைக்கப்பட்டு நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

 

கால்களால் இயக்கப்படும் குழாய்களை அமைப்பதன் மூலம் நோய் பரவல் குறைக்கப்படுவதுடன், நோய் பாதித்த இடங்களில் மற்றவர்களுடனான நேரடித் தொடர்பை பெரிய அளவில் கட்டுப்படுத்துகிறது. மேலும், இதுபோன்ற மையங்கள், கைகளை கழுவும்போது மக்களால் பயன்படுத்தப்படும் நீரின் அளவையும் குறைக்கிறது.

 

உள்ளூர் தன்னார்வலர்கள், நிர்வாகங்களே நிர்மாணித்துக் கொள்ளும் வகையில் வடிவமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பொது முடக்கக் காலத்தில் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் நிலையில், குறைவான விலை மற்றும் உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றால் அமைக்கப்படும் வகையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் கால்களால் இயக்கப்படும் குழாய்களை கொண்டு நிரந்தர மையங்களை அமைக்கும்போது, அவை கைகளை கழுவுவதை ஊக்குவிப்பதுடன், நீரின் பயன்பாட்டு அளவையும் குறைக்கிறது.

 

கை கழுவும் இடங்களில் தண்ணீரில் குளோரினை கலப்பதன் மூலம், கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பதால், அதையும் பரிசீலிக்கலாம்.

 

மேலும், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அச்சமுதாய மக்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவை இந்த வழிமுறைகளில் கூறப்பட்டுள்ள தீர்வுகளுக்கு தங்கள் ஆதரவை அளிக்கும்போது நோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்று இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழிகாட்டுதல்கள், இந்தி, மராத்தி, உருது மற்றும் ஆங்கிலம் என்று நமது அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

 

ஆங்கில வழிகாட்டுதல்கள் குறித்து அறிந்துக் கொள்ள கீழ் உள்ள இணைப்பைப் பயன் படுத்தவும்.


(Release ID: 1614261) Visitor Counter : 279