பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை 4 மாதங்களுக்குப் பிறகு திறந்தது எல்லை சாலைகள் அமைப்பு
Posted On:
12 APR 2020 11:01AM by PIB Chennai
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை எல்லை சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) சனிக்கிழமை திறந்துள்ளது. இதன்மூலம், உலகின் மற்ற பகுதிகளுடன் லடாக் இணைக்கப்பட்டுள்ளது. சோஜில்லா கணவாயிலிருந்து லே/லடாக் நோக்கி 18 எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் செல்ல தொடக்க நிலையில் அனுமதி அளிக்கப்பட்டது. சோஜில்லா கணவாயில் புதிதாக பனிப்பொழிவு ஏற்பட்டபோதிலும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
சோஜில்லா கணவாய் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால், 425 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது. லடாக் பிராந்திய ஆணையரின் உத்தரவின் அடிப்படையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டது. இதன் அடிப்படையில், சோஜில்லா பகுதியில் 11,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சாலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் பீகான் மற்றும் விஜாயக் குழுவினர் ஈடுபட்டனர். இதன்மூலம், சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. ககாங்கிர் பகுதியிலிருந்து ஜீரோ பாயின்ட் வரை பனிக்கட்டிகளை அகற்றும் பணியில், எல்லை சாலைகள் அமைப்பைச் சேர்ந்த பீகான் திட்டக் குழுவினர் ஈடுபட்டனர். இதேபோல, திராஸ் பகுதியிலிருந்து ஜீரோ பாயின்ட் வரை பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் விஜாயக் திட்டக் குழுவினர் ஈடுபட்டனர்.
(Release ID: 1613598)
Visitor Counter : 165