விவசாயத்துறை அமைச்சகம்

பொது முடக்கம் தொடங்கியது முதல் பால், காய்கறி, வேளாண் பொருட்கள் போன்ற விரைவில் அழுகும் பொருட்களை எடுத்துச்செல்ல 67 வழித்தடங்களில் 134 சிறப்பு பார்சல் ரயில்கள் இயக்கம்

Posted On: 11 APR 2020 5:44PM by PIB Chennai

நாடு முழுதும் பொதுமுடக்கம் தொடங்கியதை அடுத்து, பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள், வேளாண் வித்துக்கள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்காக இந்திய ரயில்வே நாடு முழுவதும் 67 வழித்தடங்களில் மொத்தம் 134 சிறப்பு பார்சல் ரயில்களை இயக்குகிறது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி வரை 62 வழித்தடங்களில் மொத்தம் 171 முறை  இந்த ரயில்கள் இயக்கப்பட்டன.

நாட்டின் எந்தப் பகுதியும் தொடர்பு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே சில இடங்களில் தேவை குறைவாக இருந்தபோதும் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் சாத்தியப் படுகிறதோ அந்த நிலையங்களில் ரயிலை நிறுத்தி பொருட்களை இயன்ற வரையில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகளும் இந்த ரயில்களின் மூலம் விநியோகிக்கப்படும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொருட்களை விநியோகிப்பதற்காக புதிய தடங்கள் தேவை என்றோ, ரயில்களை புதிய நிலையங்களில் நிறுத்தும் படியோ மாநிலங்களிடமிருந்து கோரிக்கை வந்தால், அது குறித்து உடனடியாகத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் (வர்த்தகம்) தெரிவித்துள்ளார்.

சிறப்பு பார்சல் ரயில் போக்குவரத்து தொடர்பாக நேரடியாக விவரங்களை அறிவதற்கு https://enquiry.indianrail.gov.in/mntes/q?opt=TrainRunning&subOpt=splTrnDtl இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

 


(Release ID: 1613529) Visitor Counter : 190