ஆயுஷ்

கொரானா வைரஸ் நெருக்கடியின்போது சுய பாதுகாப்பிற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்திக் கொள்வதை மீண்டும் வலியுறுத்துகிறது ஆயுஷ்

Posted On: 10 APR 2020 9:38PM by PIB Chennai

ஆயுர்வேதத்தின் நீண்ட கால சோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நடைமுறைகள் குறித்த ஓர் ஆலோசனையை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டது. சோதனை நிரம்பிய இந்த காலகட்டத்தில் எவர் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, அனைவரது முயற்சிகளுக்கும் உதவி புரியும் வகையில் இந்த ஆலோசனை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

2020 மார்ச் 31 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆலோசனை கீழ்க்கண்ட விரிவான ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது:

  1. இந்த ஆலோசனை வழங்கப்பட்டதன் பின்னணி:

கொரானா வைரஸ் தாக்குதல் உருவாகியுள்ள நிலையில் உலகம் முழுவதிலும் உள்ள மனித இனம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதிகபட்சமான உடல்நலத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்வது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், குறிப்பாக சுவாசம் தொடர்பான உடல்நலத்தைப் பேணும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கென சுயபாதுகாப்பிற்கான ஒரு சில வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. (இவை குறித்து கீழ்க்கண்ட பகுதிகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது)  ஆயுர்வேத மருத்துவ நூல்கள் மற்றும் அறிவியல் சார்ந்த வெளியீடுகளால் இந்த வழிமுறைகள் உறுதிப்படுத்தப்பட்டவை ஆகும்.

 

  1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதற்கான பொதுவான வழிமுறைகள்
  1. நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரையே அருந்தவும்.
  2. ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரைப்படி நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகாசனம், பிராணாயாமம், தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளவும்.
  • iii. அன்றாட சமையலில் மஞ்சள், சீரகம், மல்லி, பூண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

3.                         நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் ஆயுர்வேத வழிமுறைகள்:

  1. காலையில் 10 கிராம் (1 டீஸ்பூன் அளவு) ச்யாவன்ப்ராஷ் எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு இல்லாத ச்யாவன்ப்ராஷ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. மூலிகைத் தேநீர் அருந்தவும்/ அல்லது துளசி, இலவங்கப் பட்டை, மிளகு, சுக்கு மற்றும் திராட்சை ஆகியவை அடங்கிய வடிநீரை (டிகாக்‌ஷன்) நாளொன்றுக்கு ஓரிரு முறை அருந்தவும். தேவைப்படுமானால் இனிப்புச் சுவைக்கு நாட்டுச் சர்க்கரை அல்லது புதிய எலுமிச்சை ரசம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • (iii) ஓரிரு முறை 150 மிலி பாலில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து அருந்தலாம்.

4.         எளிமையான ஆயுர்வேத நடைமுறைகள்

  1. மூக்கில் விடுவது – காலையிலும் மாலையிலும் நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை மூக்கில் இரு துவாரங்களிலும் விடுவது. (ப்ரதிமார்ஷ் நாஸ்யா).
  2. எண்ணெய் கொப்பளிப்பு சிகிச்சை முறை – வாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். அதை விழுங்கி விடாமல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு வாயிற்குள்ளேயே கொப்பளித்து விட்டு பின்பு வெளியே துப்பிவிடவும். அதன்பிறகு வெது வெதுப்பான நீரால் வாயைக் கழுவவும். இந்த செயல்முறையை தினமும் ஓரிரு முறைகள் செய்யலாம்.
  1. வறட்டு இருமல் அல்லது தொண்டை வலி இருக்கும் நேரங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
  1. தினமும் ஒரு முறை புத்தம்புதிய புதினா இலைகள் அல்லது சீரக விதைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கவும்.  
  2. இருமல் அல்லது தொண்டை எரிச்சல் இருக்குமானால் பொடி செய்யப்பட்ட கிராம்பை நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை உட்கொள்ளவும்.
  3. இந்த வழிமுறைகள் பொதுவாக வழக்கமான இருமல் மற்றும் தொண்டை எரிச்சலை குணமாக்கப் போதுமானவை. எனினும் இந்த அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்குமாயின் மருத்துவரை அணுகுவது சாலச் சிறந்தது.

ஆயுஷ் அமைச்சகத்தின் இந்த முன்முயற்சியைத் தொடர்ந்து மாநில அரசுகள் பலவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் நோய்த் தடுப்பிற்குமான பாரம்பரிய மருத்துவ முறையிலான தீர்வுகள் குறித்த உடல்நல ஆலோசனையை வழங்கி வருகின்றன. கொரானா வைரஸ் தாக்குதலின் பின்னணியில் இவை குறிப்பாக பொருத்தமுடையவையும் ஆகும்.



(Release ID: 1613256) Visitor Counter : 954