பிரதமர் அலுவலகம்

கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பதினோரு உயர்நிலைக் குழுக்களின் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகம் பரிசீலனை

தடையில்லாத விநியோகச் சங்கிலித் தொடர் நிர்வாகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முக்கியமானவை

வெகுதொலைவில் இருப்பவர்களையும் அவரவர் பிராந்திய மொழிகளில் தொடர்பு கொள்வதன் மூலம் கவனத்துக்குள் வைத்திருக்கலாம்

Posted On: 10 APR 2020 2:39PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றின் விளைவாக ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளித்துத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பதினோரு உயர்நிலைக் குழுக்களின் கூட்டம் இன்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. பெருந்தொற்றின் பாதிப்புகளைச் சீரமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்காணிப்பதற்காக பிரதமர் அலுவலகம் பல்வேறு நிலைகளில் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பரிசீலனைக் கூட்டங்களில் இதுதான் சமீபத்திய கூட்டம் ஆகும்.

உயர்நிலைக் குழுக்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை முதன்மைச் செயலாளர் மீள்ஆய்வு செய்தார்.  இன்றியமையாத பொருட்கள் கிடைப்பதற்குத் தேவையான விநியோகச் சங்கிலித்தொடர் மற்றும் போக்குவரத்து நிர்வாகம், விநியோகத்தில் பங்கு வகிப்பவர்களின் நலனுக்காக எடுத்துவரும் முயற்சிகள், சமூக இடைவெளியைக் கடைபிடித்துக் கொண்டே விவசாயிகள் தங்களது விளைச்சலை அறுவடை செய்து கொள்ள உதவுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யத் தேவைப்படும் தகுதி கட்டமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான பிரச்சனைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.  விரிவான பரிசோதனை நெறிமுறை மற்றும் செயல்முறை குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீண்டுமு ஆய்வு செய்து தங்களது திருப்தியைத் தெரிவித்தனர்.  இந்த நெறிமுறைகளின்படி இது வரை 1,45,916 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வீடற்றவர்கள் போன்ற நலிவடைந்த பிரிவினர்களுக்கு தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து தருமாறு அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  மத்திய அரசு, மாநிலங்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது.  மாவட்ட அளவிலான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பிபிஇ தயாரிப்பு விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.  சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு தகுதி கட்டமைப்பு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.  தொண்டு நிறுவனங்களும், குடிமைச்சமூகக் குழுக்களும்கூட தொற்று நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  மாவட்ட அளவில் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றுவது என்பது செய்ததையே திரும்பச் செய்வதை தடுக்கும் என்றும் வளங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும் முதன்மைச் செயலாளர் பரிந்துரைத்தார்.

பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார நிவாரணத் தொகுப்பின் மூலம் செயல்படுத்தப்படும் நல்வாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.  உதவி பெறத் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் உதவிகள் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவதில் பாரபட்சமற்ற தகவல் தரவின் முக்கியத்துவத்தை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் சரியான நேரத்தில் தகவலைத் தருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.  கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் தகவலானது அவரவர்களின் மொழிகளில் போய்ச் சேர வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.   தொழில்நுட்பம் மற்றும் தகவல் தரவு மேலாண்மை தொடர்பான ஆய்வில் ஆரோக்கிய சேது செயலி அறிமுகப்படுத்தப்பட்டதைப் பாராட்டினர்.  மேலும் இந்தச் செயலியை அதிகப் பயனாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய அரசின் பிற அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

*****
 



(Release ID: 1613016) Visitor Counter : 195