ரெயில்வே அமைச்சகம்

ரயில்வேயில் 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றம்: ஆரம்ப இலக்கில் பாதியை ரயில்வே துரித வேகத்தில் எட்டியது

Posted On: 06 APR 2020 12:52PM by PIB Chennai

கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தன்னிடம் உள்ள வசதிகளையும் , ஆதாரங்களையும் இந்திய ரயில்வே நிர்வாகம் பயன்படுத்த முன்வந்துள்ளது.  5000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றுவது என்ற ஆரம்பகட்ட இலக்கில் பாதியான 2500 பெட்டிகளை அவ்வாறு குறுகிய கால அவகாசத்தில் மாற்றி ரயில்வே நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.

முடக்கநிலை அமலில் உள்ள காலத்தில், மனிதவள ஆதாரம் குறைவாக உள்ள சூழ்நிலையில், சுழற்சி அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களும், குறுகிய கால அவகாசத்தில் நிறைய மாற்றங்கள் செய்தலுக்கான அசாத்தியமான பணிகளை செய்து முடித்துள்ளன. 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றப்பட்டதை அடுத்து, அவசர நேரத்தில் பயன்படுத்த 40,000 தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.

முன்மாதிரி வடிவமைப்புக்கு ஒப்புதல் கிடைத்ததும், மாற்றங்கள் செய்யும் பணிகளை மண்டல ரயில்வே நிர்வாகங்கள் தொடங்கின. சராசரியாக ஒரு நாளுக்கு 375 பெட்டிகளில் இந்த மாற்றங்கள் செய்து முடிக்கப்படுகின்றன. நாட்டில் 133 இடங்களில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.

மருத்துவ அறிவுறுத்தல்களின்படி இந்த ரயில் பெட்டிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேவைகள் மற்றும் விதிமுறைகளின்படி மருத்துவ கண்காணிப்பு மற்றும் தங்கி சிகிச்சை பெறுதலை செம்மையாக்குவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவசர கால தேவைகளுக்காக மட்டுமே ரயில்வே தனிமைப்படுத்தல் பெட்டிகள் மாற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சகத்தின் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

****



(Release ID: 1611558) Visitor Counter : 264