ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மத்திய ரசாயனத் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் `பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு ரூ.27 கோடிக்கு மேல் நன்கொடை
Posted On:
01 APR 2020 12:57PM by PIB Chennai
கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு (பிஎம் கேர்ஸ்) ரூ.27 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளன.
இதையடுத்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.டி.வி.சதானந்த கவுடா தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் இவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “எனது கோரிக்கையை ஏற்று. கொவிட்-19-க்கு எதிரான இந்திய அரசின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நன்கொடை அளித்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்களுக்கு எனது நன்றிகள்”, என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்களுக்கு திரு. கவுடா எழுதிய கடிதத்தில், ”பெருந்தொற்றான கொரோனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது, இருப்பினும், இந்த அளவுக்கு பொது சுகாதாரத்துக்குக் கேடான நிலையைச் சமாளிக்க, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் ஒன்றுபட்ட முயற்சி அவசியமாகும், ஆகவே, பிஎம் கேர்ஸ் நிதிக்கு, உங்களது சிஎஸ்ஆர் நிதியிலிருந்து அதிகபட்ச அளவுக்கு நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடை 2013 நிறுவனங்கள் சட்டத்தின் படி, சிஎஸ்ஆர் செலவு என்ற தகுதியைப் பெறும் என்று பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளதை அவர் தனது கடித்தத்தில் சுட்டிகாட்டியுள்ளார். .
***
(Release ID: 1609870)
Visitor Counter : 171