குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றி உலகிற்கான வழிகாட்டி என குடியரசு துணைத் தலைவர் பாராட்டு
Posted On:
31 MAR 2020 5:39PM by PIB Chennai
130 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதிலுமான முடக்கநிலையின் முதலாவது வாரத்தை வெற்றிகரமாக அமலாக்கம் செய்ததில் மத்திய மாநில அரசுகளின் முயற்சிகள், மக்களின் உறுதி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு இந்தியக் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு. எம். வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
முடக்கநிலை காலத்தின் முதலாவது வார நிகழ்வுகளைத் தொகுத்து அளித்துள்ள குடியரசு துணைத் தலைவர், சமூக இடைவெளியைப் பராமரிக்க மளிகைக் கடைகள், காய்கறி மார்க்கெட்களுக்கு வெளியே வரையப்பட்டுள்ள வட்டங்கள், கட்டங்கள், கோடுகள் ஆகியவை பற்றியும், முடக்கநிலை அமலில் அரசு நிர்வாகம் தீவிரமாக இருப்பது பற்றியும், ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தல் வார்டுகளாக ரயில்வே நிர்வாகம் மாற்றிய வேகம் பற்றியும், மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை சில விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்கள் வேகமாக உருவாக்கியது ஆகியவை, இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உலக அளவில் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இந்தியா அமைந்துள்ளது என்று அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன் எப்போதும் இல்லாத, பெருமளவிலான சமூக மற்றும் இயல்பு வாழ்க்கை முடக்கநிலை நாடு முழுக்க அமல் செய்யப்பட்டுள்ள நிலையில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், அறுவடை பருவத்தில் உள்ள விவசாயிகள் போன்றவர்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ள அவர், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முதலாவது வார காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து கிடைப்பது குறித்து அவர் திருப்தி தெரிவித்துள்ளார். முடக்கநிலை காலத்தின் அடுத்த இரண்டு வாரங்கள், கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போதைய முயற்சிகளுக்கு, இன்னும் தீவிரமான உறுதிப்பாட்டுடன் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நமது மக்கள் தொகை அளவையும், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உலக அளவில் முக்கியமான வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் சுகாதாரம் மற்றும் சொத்துகளை அழித்துவிட்ட இந்த உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் முன்னுதாரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சக மனிதர்கள் குறித்து இந்தியர்களுக்கு சில பொறுப்புணர்வுகள் இருப்பதாக வலியுறுத்திய அவர், தர்மத்தின் வழி நடக்கும் அவர்கள், உலகளவில் நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் கூட்டாக சேர்ந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
(Release ID: 1609788)