ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் மருந்துகளுக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை;

Posted On: 31 MAR 2020 5:10PM by PIB Chennai
  1. மருந்துகள் கிடைக்கும் நிலை, வழங்கல் சங்கிலித் தொடர் மற்றும் மருந்துகள் தொடர்பான உள்ளூர் அளவிலான பிரச்சினைகள் குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற துறைகளின் உதவியுடன் மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், மருந்தாக்கம், மருந்து வழங்கீடு துறை ஆகியவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்தத் துறையில் மத்திய கட்டுப்பாட்டு அறை [011-23389840]  ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறை காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செயல்படுகிறது. மருந்துப்பொருள்கள் விலை நிர்ணய தேசிய ஆணையம் (NPPA) மற்றொரு கட்டுப்பாட்டு அறையை [உதவி கோருவதற்கான எண்  1800111255] அமைத்துள்ளது. அது 24 மணி நேரமும் செயல்படுகிறது. கோவிட் 19 நோய்த் தொற்று தொடர்பான விசாரணைகள் / புகார்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான விஷயங்களை இந்தக் கட்டுப்பாட்டு அறைகள் கையாள்கின்றன. ரசாயன மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான பொருள் கையிருப்பு சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைக்கும் பணியையும் இவை கவனிக்கின்றன.
  2. சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம், வணிகம் , தொழில் துறை அமைச்சகம், சுங்கத் துறை, மத்திய மற்றும் மாநில ரசாயன மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு ரசாயன மருந்துகள் மற்றும் மருத்துவ சாதன சங்கங்கள் போன்ற தொடர்புடைய துறைகளுடன் மருந்தாக்கம், மருந்து வழங்கீடு துறை நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  3. சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து மருந்துகள் உற்பத்தியை மருந்தாக்கம், மருந்து வழங்கீடு துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முடக்கநிலை அமலுக்குப் பிறகு, அவ்வப்போது இந்தத் துறையில் எழும் பிரச்சினைகளை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அரசுகள் உள்ளிட்ட மற்ற நிர்வாக அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து முன்னுரிமை அடிப்படையில், கூடிய விரைவில் தீர்த்து வைத்து, உற்பத்தியை ஊக்குவிக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது. மற்ற அமைச்சகங்கள் / துறைகள் தொடர்பாக ஏதும் பிரச்சினைகள் வந்தால் அல்லது டி.ஓ.பி.களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பாக உரிய அதிகாரிகளுக்கு அவை குறியீடு செய்து, அதிகாரம் பெற்ற குழுக்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. எந்தவொரு நேரத்திலும் அத்தியாவசிய ரசாயன மருந்துகள் போதிய அளவில் கிடைக்கும் வகையில், உற்பத்தி செய்து போதிய கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று உற்பத்தியாளர்களுக்கு மருந்துப்பொருள்கள் விலை நிர்ணய தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. முடக்கநிலை காலத்தில் ரசாயன மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
  4. மேலும், பல்வேறு நிலைகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி வாட்ஸப் குழுக்கள் / இமெயில் முறைமைகள் உருவாக்குதல், காணொளிக் காட்சி கலந்தாய்வுகள் நடத்தி இந்தத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

 

*****



(Release ID: 1609648) Visitor Counter : 146