ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கொவிட்-19 பரவாமல் தடுக்க மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புடைமை நிதியை வழங்குமாறு மத்திய அமைச்சர் திரு. சதானந்த கவுடா வலியுறுத்தல்

ஊழியர்கள் குறைந்தது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக அளிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்

Posted On: 31 MAR 2020 11:41AM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அவசரப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.சதானந்த கவுடா, தமது அமைச்சகத்தின் கீழ் லாபத்துடன் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், தங்களின் பெருநிறுவன (கார்ப்பரேட்) சமூகப் பொறுப்புடைமை எனப்படும் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ஒரு பகுதியை பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு (பிரதமர் கேர்ஸ்) நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்களுக்கு திரு. கவுடா எழுதியுள்ள கடிதத்தில், கொடிய தொற்று நோயான கொரோனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது,  இருப்பினும், இந்த அளவுக்கு பொது சுகாதாரத்துக்குக் கேடான நிலையைச் சமாளிக்க, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் ஒன்றுபட்ட முயற்சி அவசியமாகும், ஆகவே, பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு, உங்களது சிஎஸ்ஆர் நிதியிலிருந்து அதிகபட்சம் இயன்ற அளவுக்கு நன்கொடை வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள இது போன்ற துயரமான நிலை அல்லது ஏதாவதொரு அவசர நிலையைச் சமாளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு பிரதமர் கேர்ஸ் நிதியை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடை 2013 நிறுவனங்கள் சட்டத்தின் படி, சிஎஸ்ஆர் செலவு என்ற தகுதியைப் பெறும் என்று பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் ஏற்கனவே, விளக்கம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை செலவழிக்கப்படாமல் இருக்கும் 2019-20-ஆம் நிதி ஆண்டுக்கான சிஎஸ்ஆர் நிதியை பொதுத்துறை நிறுவனங்கள் உடனடியாக பிரதமர் நிதிக்கு வழங்கி, நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திரு.கவுடா கூறியுள்ளார். தங்கள் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் , குறைந்தது ஒரு நாள் ஊதியத்தையாவது, தாங்களாக முன்வந்து பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு வழங்குமாறு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்  ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.



(Release ID: 1609518) Visitor Counter : 136