மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மனித வள மேம்பாட்டுத் துறையின் இணையவழி கல்விக்கான தேசிய மேடை ஸ்வயம் மற்றும் இதர டிஜிட்டல் முன்முயற்சிகளை அணுகுவது கடந்த ஒரு வாரத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ளது – மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

Posted On: 28 MAR 2020 2:23PM by PIB Chennai

ஊரடங்கு நிலவி வரும் இத்தருணத்தில் வீட்டில் இருந்தே தங்கள் கல்வியை மாணவர்கள் தொடர்வதை உறுதிப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது இணைய வழி/டிஜிட்டல் மூலமான கல்விக்கான முன்முயற்சிகளின் மூலம் முயற்சித்து வருகிறது. மாணவர்கள் இந்த கல்விக்கான தளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் நேரத்தை முழுமையாகவும் சிறப்பாகவும் ஆக்கிக் கொள்ளுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சரின் இந்த வேண்டுகோளுக்கான ஆதரவு பெருமளவில் உள்ளது.

கடந்த ஒரு வார காலத்தில் இணையவழி கல்விக்கான தேசிய தளமான ஸ்வயம் மற்றும் இதர டிஜிட்டல் முன்முயற்சிகளை மாணவர்கள் அணுகுவது மும்மடங்காக ஆகியுள்ளது. ஸ்வயம் இணைய தளத்தின் மூலம் சிறந்த கற்பித்தலை இலவசமாகப் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு இந்த வளர்ச்சியைக் காண முடிந்தது என திரு. ரமேஷ் பொக்ரியால் கூறினார். இதற்கு முன்பு ஸ்வயம் இணைய தளத்தின் பாட வகுப்புகள் குறிப்பிட்ட கால வரையறை கொண்டவையாக இருந்தன என்பதோடு, இதற்கான பதிவை முன்கூட்டியே செய்துகொள்ளவும் வேண்டியிருந்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், இணையவழி கல்வியை வளர்க்கவும் எந்தவொரு முன்பதிவும் இன்றி எந்தவொரு மாணவரும் இலவசமாக இந்த வசதியைப் பெறலாம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

2020 மார்ச் 23 முதல் சுமார் 50,000 பேர் ஸ்வயம் இணைய தளத்தை அணுகியுள்ளனர். இவர்கள் ஸ்வயம் இணையதளத்தின் ஜனவரி 2020 பருவகாலத்தில் மேற்கொள்ளப்படும் 571 பாடப்பயிற்சிகளுக்கு ஏற்கனவே பதிவு செய்துகொண்டுள்ள 25 லட்சம் மாணவர்கள்/ பயில்வோருக்கும் மேலதிகமாக வந்துள்ளவர்கள் ஆவர். ஸ்வயம் இணையதளத்தில் மொத்தம் 1,900 பாடப்பிரிவுகளுக்கான களஞ்சியம் அமைந்துள்ளது. இவற்றை 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது அணுகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனினும், அமெரிக்கா, ஐக்கிய அரபு கூட்டமைப்பு, ஜெர்மனி, நேபாளம், சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய  நாடுகளில் உள்ளோரும் இவற்றை அணுகி வருகின்றனர்.

ஸ்வயம் இணையதளத்தின் வீடியோக்களை ஒளிபரப்பி வரும் ஸ்வயம் பிரபா தொலைக்காட்சியையும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் தினமும் கண்டுகளித்து வருகின்றனர். தேசிய டிஜிட்டல் நூலகத்தையும் தினமும் சுமார் 43,000 பேர் தற்போது அணுகி வருகின்றனர். இதன் மூலம் இந்த வசதியை அணுகுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆகியுள்ளது.

கல்வி ஆராய்ச்சி தொழில்நுட்பத்திற்கான தேசிய மையத்தின் (என்சிஇஆர்டி) கல்வி சார்ந்த இணையதளங்களான திக்‌ஷா, ஈ-பாடசாலா, என்ஆர்ஓஈஆர், என்ஐஓஎஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் கல்வி (ஈ-யந்திரா) போன்ற தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இதர முன்முயற்சிகள், கல்விக்கான கட்டற்ற மென்பொருள், நிகர்நிலை பரிசோதனைகள், கல்வி கற்பதற்கான நிரல்வகை ஆகியவையும் அதிகமானோரால் அணுகப்படுவதையும் காண முடிகிறது.

மேலும் மேலும் அதிகமான மாணவர்கள் தமது அமைச்சகத்தின் இத்தகைய முன்முயற்சிகளை சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கல்வி அனுபவத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 

*****



(Release ID: 1608936) Visitor Counter : 552