குடியரசுத் தலைவர் செயலகம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் கோவிட் - 19 குறித்த செயல்பாடுகள் பற்றி கலந்தாய்வு

Posted On: 27 MAR 2020 4:38PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்யா நாயுடு ஆகியோர் இன்று (மார்ச் 27, 2020) கானொளி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினர். கோவிட் - 19 நோய்த் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எந்த அளவுக்குத் துணை நிற்க முடியும் என்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது பற்றி இந்த ஆய்வு நடந்தது.

சமூகத்தின் கூட்டு பலத்திற்கு பாராட்டு தெரிவித்து வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நோய்த் தொற்றை கூடிய சீக்கிரத்தில் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தன்னார்வ அமைப்புகள், மத அமைப்புகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

இந்திய சமுதாயத்தில்  உட்பொதிந்துள்ள “பகிர்தல் மற்றும் அக்கறையாக இருத்தல்'' என்ற விஷயம்தான் நம்முடைய பலமாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர். சமூகத்தில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களின், குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோரின் துன்பங்களைத் தீர்க்க அரசின் நடவடிக்கைகள் உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். இந்த கானொளிக் கலந்துரையாடலில் 14 ஆளுநர்களும், டெல்லி துணை நிலை ஆளுநரும் தங்கள் பகுதிகளில் கண்டறிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்தப் பகுதிகள் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய கருத்துகள் கேட்கப்பட்டன.

குடியரசு துணைத் தலைவரால் இந்த வீடியோ கான்பரன்ஸ் நடத்தப்பட்டது. நாட்டில் முடக்கநிலை அமல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களின் சிரமங்களைக் குறைப்பதில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இது இருந்தது.

மாநிலங்களில் கோவிட் -19 பாதிப்பின் இப்போதைய நிலை, அதிக பாதிப்பு வாய்ப்புள்ள பகுதிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்பு, கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவான செயல்பாடுகளில் மக்கள், சமுதாய அமைப்புகள் / தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு பற்றிய விஷயங்கள் இதில் பேசப்பட்டன. குறிப்பாக, முடக்கநிலை காலம், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சவால்களை சந்திப்பதில் மேற்கொள்ளும் நடைமுறைகள் பற்றியும் பேசப்பட்டது.

மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத்சிங் கோஷியாரி வீடியோ கான்பரன்ஸில் முதலில் பேசியபோது, இந்த நோய்த் தொற்றை சமாளிக்க மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டினார். கேரளாவில் சமூக இடைவெளியை பராமரிப்பதை மக்களை ஏற்கச் செய்வதில் அரசும், தன்னார்வ அமைப்புகளும், மருத்துவம் மற்றும் துணை மருத்துவத் துறையினரும் காவல் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதை கேரளா ஆளுநர் திரு. ஆரிப் முகமது கான் பாராட்டினார். மேலும் அவர் சமூக இடைவெளியைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிய வேண்டாம், வீட்டிலேயே இருங்கள் (“yun hi basabab na fira karo, kisi shaam ghar bhi raha karo”) என்ற வரிகளை கூறினார்.  மேலும், ஓய்வுபெற்ற 1800 டாக்டர்கள் மற்றும் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் தேவை ஏற்பட்டால் சேவை செய்ய வருவதாக மாநில அரசிடம் பதிவு செய்துள்ளனர். தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள், வாழ்வில் சிரமமான காலக்கட்டத்தை அனுபவிப்பார்கள் என்பதால் அவர்களுக்கு கலந்தாய்வு வசதிகள் அளிக்க 375 உளவியல் நிபுணர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் பின்பற்றப்படும் இந்தப் புதுமையான அணுகுமுறையை மற்ற மாநிலங்களிலும் பின்பற்றலாம் என்று கேரளா ஆளுநர் கூறினார்.

நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் சமுதாயத்தின் கூட்டு பலம் பற்றி கர்நாடகா மாநில ஆளுநர் திரு. வஜுபாய் வாலா பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் நோய்த் தொற்று குறித்து விழிப்புணர்வை பரப்புவதில் சுமார் 8000 செஞ்சிலுவை சங்கத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலம் முழுக்க உணவுப் பொட்டலங்கள் வழங்கும் சேவையில் அக்சய் பத்ரா என்ற சமூக சேவை அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

எந்த சவாலையும் சந்திக்க ஹரியானா மாநிலம் முழு ஆயத்தமாக உள்ளது என்று அந்த மாநில ஆளுநர் திரு. சத்யதேவ் நாராயண் ஆர்யா தெரிவித்தார். முடக்கநிலை அமலாக்கம் செய்வதில் மாநில அரசும், மற்ற அனைத்து அமைப்புகளும் முழு ஒருங்கிணைப்புடன் செயல்படுவதாக டெல்லி துணைநிலை ஆளுநர் திரு அனில் பைஜால் கூறினார். மக்களின் பிரச்சினைகளைக் குறைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். சூழ்நிலைகள் பற்றி விவாதிக்க துணைநிலை ஆளுநரும், டெல்லி முதல்வரும் தினமும் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மாவட்ட அளவில் நிவாரண உதவிகள் வழங்குதல், செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், சமூக இடைவெளியைப் பராமரித்தல் பற்றி மக்களிடம் வலியுறுத்துவதற்கான ஒருங்கிணைத்தல் பணிகளில் நிர்வாக மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் தனிமைப்படுத்தல் சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக ஆளுநர் திரு. ஆச்சார்ய தேவ் விராட் தெரிவித்தார். வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்த ஊடகங்கள் மூலம் சமூக விழிப்புணர்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சவாலை எதிர்கொள்வதில் அரசு, சமுதாய மற்றும் மத அமைப்புகள், தனியார் துறை, தன்னார்வ மற்றும் கலாச்சார அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைக்க குஜராத்தின் கூட்டுறவு சித்தாந்தம் பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார். விழிப்புணர்வைப் பரப்புவதில் சமூக ஊடகங்கள் விரிவாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார். ஆளுநர் மாளிகை பகுதியில் வாழும் சுமார் 800 குடும்பங்களுக்கு உணவு வழங்குவதற்கு ஆளுநர் மாளிகை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நோய்த் தொற்றின் தீவிரம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் உதவிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெலங்கானா ஆளுநருக்கு திரு. எம். வெங்கய்யா நாயுடு யோசனை தெரிவித்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் தேவை ஏற்பட்டால் பல்கலைக்கழகங்களைப் பயன்படுத்திக் கொள்ள ஆயத்த நிலையில் இருப்பதாக ஆளுநர் திரு. ஜக்தீப் தான்கர் தெரிவித்தார். மேலும், நோயின் தாக்கம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தங்களிடம் உள்ள ஆதார வளங்களுக்கு உட்பட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினர் தங்களால் இயன்ற வரையில் சிறப்பான சேவைகள் செய்து வருவதாக அவர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் மக்களுக்கு உதவி செய்வதில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டிருப்பதாக அந்த மாநில ஆளுநர் திரு. பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். மாவட்டங்களில் மலைவாழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உறுதி செய்ய சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பிகார் மாநிலம் சர்வதேச எல்லைகளைக் கொண்டதாக இருப்பதால், நோய் தாக்குதலின் ஆபத்து வாய்ப்பு அதிகம் இருப்பதாக மாநில ஆளுநர் திரு. பாகு சௌகான் கூறினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வலர்கள் சேவை செய்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு இந்த சங்கத்தின் ஆம்புலன்ஸ்கள் உதவிகரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கி அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, மாநில ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மானிய விலையில் உணவு வழங்க அம்மா உணவகங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.  கலைஞர்கள், தனியார் துறையினர் மற்றும் மதத் தலைவர்களின் உதவிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு குடியரசு துணைத் தலைவர் ஆலோசனை கூறினார்.

மத்தியப் பிரதேச நிர்வாகம் வெகு சீக்கிரமாக நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக ஆளுநர் திரு. லால்ஜி டாண்டன் பாராட்டு தெரிவித்தார். தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். மாநிலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பாராட்டுக்குரிய வகையில் சேவை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சண்டீகரில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் உணவுப் பொட்டலங்கள் வழங்கி வருவதாக பஞ்சாப் ஆளுநரும் சண்டீகர் நிர்வாக அதிகாரியுமான திரு. வி.பி. சிங் பட்நோரே தெரிவித்தார். கோவிட் - 19 பாதிப்பால் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ள பஞ்சாப் மற்றும் சண்டீகர் அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

மக்கள் நன்கொடைகள் அளிக்க ஒரு நிதி அமைப்பு தொடங்கப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார். இந்த சவாலை எதிர்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். சமூக இடைவெளியைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

டெல்லி துணைநிலை ஆளுநர், சண்டீகர் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 15 ஆளுநர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பிறகு நிகழ்ச்சியை நிறைவு செய்த குடியரசுத் தலைவர் திரு. கோவிந்த், மாநில அரசுடன் அடிக்கடி நிலைமையை ஆய்வு செய்து, கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கான பங்களிப்புகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த அனுபவங்களின் அடிப்படையில், நாட்டின் மற்ற பகுதிகளிலும் சிறந்த நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

 

*****


(Release ID: 1608832) Visitor Counter : 491