உள்துறை அமைச்சகம்

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் சமூக விலகலைப் பராமரிக்க வெளி மாநிலங்களைச் சேர்ந்த இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள், மாணவர்கள் போன்றோருக்கு உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Posted On: 27 MAR 2020 3:16PM by PIB Chennai

நாடு தழுவிய 21 நாள் பொது முடக்கத்தின் போது,  பிற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அமைப்பு சாரா பிற தொழிலாளர்களுக்கு, உணவு, உறைவிடம் உள்ளிட்ட போதுமான ஆதரவை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். இதே போல, பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், உழைக்கும் மகளிர் ஆகியோர் தாங்கள் தங்கியுள்ள இடங்களிலேயே தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அமைப்பு சாரா தொழிலாளர்கள், குறிப்பாக வேலை இல்லாமல் தவிக்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைக்குத் தீர்வு காணும் வகையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் மூலமாக, உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய உறைவிடம் ஆகியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்வது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள பிரிவினருக்கு, இலவச உணவு தானியங்கள், இதர அத்தியாவசியப் பொருள்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதுடன், அவை முறையாகக் கிடைக்கின்றனவா என்பது பற்றித் தெரிந்துகொள்ள மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் முயற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது, இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்க இது உதவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகள், வாடகை உறைவிடங்கள், விடுதிகள் போன்றவை தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதுடன், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை முறைப்படுத்துவதும் அவசியம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இதனால், மாணவர்களும், உழைக்கும் மகளிரும் விடுதிகளில் தற்போது உள்ள வசதிகளுடன் தொடர்ந்து தங்கியிருந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைப் பராமரிக்க முடியும். 

அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகள் விநியோகத்தை உறுதி செய்யும் நிலையில், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பொது முடக்கத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும், மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் கட்டாயமாகும்.(Release ID: 1608827) Visitor Counter : 38