சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கச் செய்யும் துறை, கோவிட் - 19 பாதிப்பு சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு கருதி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது
Posted On:
27 MAR 2020 1:43PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கச் செய்யும் துறை (DEPwD), கோவிட் - 19 நோய்த் தொற்று சூழ்நிலையில், மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ``விரிவான மாற்றுத்திறனாளி உள்ளடக்க நிலை வழிகாட்டுதல்களை'' வெளியிட்டுள்ளது. கோவிட் 19 நோய் உலகெங்கும் தீவிரமாக, வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பொது சுகாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 பாதிப்பு நிலையைத் தொடர்ந்து அதை ஒரு தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்து, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் தேவையான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
கோவிட் - 19 பாதிப்பு ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் பாதிக்கும் நிலையில், உடல், உணர்வு மற்றும் நோயறிதல் வரம்புகள் காரணமாக, மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இப்போதுள்ள நிலையில், அவர்களுடைய மாற்றுத்திறன் சார்ந்த தேவைகளை, தினசரி வாழ்வு செயல்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமானதாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன் பிரிவு 8-ன்படி, இதுபோன்ற சூழ்நிலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட / மாநில / தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளையும் பேரிடர் மேலாண்மைச் செயல்பாடுகளில் சேர்த்துக் கொள்வதுடன், இதுகுறித்து அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவித்திட வேண்டும் என்பதும் அந்தப் பிரிவின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையின் போது, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான மாநில ஆணையாளரை ஈடுபடுத்துவதும் இதன் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2019 செப்டம்பர் மாதத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பும், உள்துறை அமைச்சகமும், பேரிடர் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆபத்துகளைக் குறைப்பதற்கான உள்ளடக்கம் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்களை வெளியிட்டன. அதன்பிறகு சமீபத்தில் 2020 மார்ச் 24 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், 25.03.2020ல் இருந்து 21 நாட்களுக்கு கோவிட் - 19 பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு துறைகளும் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் நிலையில், கோவிட் - 19 சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மாநில / மாவட்ட நிர்வாகங்கள் அதிக கவனம் செலுத்தும் வகையிலான செயல்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பொதுவான செயல் திட்டங்கள்
- கோவிட் - 19 பற்றிய அனைத்துத் தகவல்கள், அளிக்கப்படும் சேவைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், எளிமையான, உள்ளூர் மொழியில் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்; அதாவது பார்வைத் திறனற்றவர்களுக்கு பிரெய்லி வெளியீட்டு வடிவிலும், ஆடியோ டேப்களாகவும், கேட்புத் திறனற்றவர்களுக்கு வீடியோ தகவலாக, விளக்க வரிகளுடன் உள்ளதாக, சைகை மொழியில் விளக்கம் தந்திருப்பதாக இருக்க வேண்டும். இணையதளங்களில் கிடைக்கும் நிலையில் இவை இருக்க வேண்டும்.
- அவசரநிலையிலும், சுகாதார அமைப்பு முறையிலும் பணியாற்றும் சைகை மொழி வழிகாட்டுநர்களுக்கு, கோவிட் - 19ஐ கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இணையான அதே சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- அவசர சூழ்நிலைகளைக் கையாளும் பொறுப்பில் உள்ள அனைவரும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த விஷயத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு கூடுதலாக ஏற்படக்கூடிய ஆபத்துகள் ஏதும் உள்ளனவா என்பதை அறிந்திருப்பராகவும் இருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவான பொருத்தமான தகவல்கள், இதுகுறித்த அனைத்து விழிப்புணர்வு முகாம்களிலும் இடம் பெற வேண்டும்.
- தனிமைப்படுத்துதல் காலத்தில், அத்தியாவசிய ஆதரவு சேவைகள், தனிப்பட்ட உதவி, இயல்பு ரீதியிலும் தகவல் தொடர்பிலும் அணுகுதல் வசதி ஆகியவை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். உதாரணமாக, பார்வைத் திறனற்றவர்கள், சிந்தனைத் திறன் குறைந்தவர்கள் தங்களை கவனித்துக் கொள்பவர்களை சார்ந்து இருப்பவர்கள் ஆவர். அதேபோல, மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சக்கர நாற்காலி மற்றும் இதர உதவி சாதனங்களின் குறைபாடுகளை சரி செய்ய உதவி கோரக் கூடும்.
- மாற்றுத்திறனாளிகளை கவனித்துக் கொள்பவர்கள் அவர்களை சந்திப்பதற்கு முடக்கநிலை காலத்தில் விதிவிலக்கு அளிக்கலாம் அல்லது முன்னுரிமை அடிப்படையில் எளிமையான நடைமுறையில் அவர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கலாம்.
- மாற்றுத்திறனாளியாக இருந்து, மற்ற மனிதர்களுடன் குறைந்தபட்சத் தொடர்பில் இருப்பவர்களுக்கு ஆதரவுகளைத் தொடர்ந்து அளிப்பதில், அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கு, தனிப்பட்ட பாதுகாப்பு உடைகள் தருவது குறித்து உரிய தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் உள்ள வீடுகளுக்கு வேலையாட்கள், கவனித்துக் கொள்பவர்கள் மற்றும் இதர சேவை வழங்குநர்கள் செல்ல குடியிருப்போர் நல சங்கத்தினர் அனுமதிக்கும் வகையில் அவர்களுக்கு உரிய விளக்கம் தரப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய உணவு, தண்ணீர், மருந்து கிடைக்கச் செய்ய வேண்டும், மற்றும் முடிந்த வரையில் அவர்களுடைய இருப்பிடத்திலோ அல்லது தனிமைப்படுத்தி சிகிச்சை பெறும் இடத்திலோ அவை கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களின் தினசரி தேவைகளை எளிதில் வாங்கிச் செல்ல வசதியாக, சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட சில்லரை விற்பனைக் கடைகளில் அவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு நேரத்தை ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்கலாம்.
- மாற்றுத்திறனாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் காலத்தில் தேவையான உதவிகளை அளிப்பதற்காக, ஆதரவு குழுக்களை உருவாக்கலாம்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுடைய உடல்நிலைக்கு ஏற்ப உதவிகள் கிடைப்பதற்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவசர காலத்தில் பயணத்துக்கான அனுமதி வழங்குதலுக்கான அவசியம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலான பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
- சிகிச்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
- இந்த காலகட்டத்தில் பார்வைத்திறனற்ற மற்றும் இதர தீவிர பாதிப்பு உள்ள தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு அத்தியாவசிய சேவையில் இருந்து விலக்கு தரப்பட வேண்டும். அவர்களுக்கு எளிதில் தொற்று பரவக் கூடும் என்பதால் இவ்வாறு விலக்கு அளிக்க வேண்டும்.
- தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் காலத்தில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மன அழுத்தத்தை நீக்குவதற்கு, கவுன்சலிங் செய்வதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமான 24 X 7 ஹெல்ப்லைன் எண்கள் மாநில அளவில் உருவாக்கப்பட வேண்டும். அதில் வீடியோ கால் செய்யும் வசதியும், சைகை மொழி மூலம் தகவல் தெரிவிக்கும் வசதியும் இருக்க வேண்டும்.
- கோவிட் - 19 குறித்த தகவல்கள் மாற்றுத்திறனாளிகளைச் சென்று சேருவதற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளையும் இதில் ஈடுபடுத்திக் கொள்வது பற்றி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்கலாம்.
இந்த காலக்கட்டத்தில் மாற்றுத்திறன் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடைமுறை
(1) மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர்
- மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர்கள், இந்த நடைமுறைகளை அமல் செய்யும் முன்னோடி அதிகாரியாக அறிவிக்கை செய்யப்பட வேண்டும்.
- நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் மாற்றுத்திறன் சார்ந்த விஷயங்களுக்குத் தீர்வு காண்பதற்கு அவர் தான் ஒட்டுமொத்த பொறுப்பு அதிகாரியாக இருப்பார்.
- மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு, சுகாதாரம், காவல் மற்றும் சார்புடைய இதர துறைகளுடனும், மாவட்ட ஆட்சியர்கள், மாற்றுத்திறனாளிகள் விஷயங்களைக் கையாளும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடனும் ஒருங்கிணைப்பு பணியை இவர் செய்வார்.
- கோவிட் - 19 பற்றிய அனைத்துத் தகவல்கள், மக்கள் நடமாட்டத்துக்கான கட்டுப்பாட்டு நடைமுறைகள், அளிக்கப்படும் சேவைகள் உள்ளூர் மொழியில், எளிதில் அணுகும் வகையில் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அதிகாரியாகவும் அவர் இருப்பார்.
(2) மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும் விஷயங்களைக் கையாளும் மாவட்ட அதிகாரி
- மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும் விஷயங்களைக் கையாளும் அதிகாரி, மாற்றுத்திறனாளிகள் குறித்த விஷயங்களுக்கான மாவட்ட முன்னோடி அதிகாரியாக அறிவிக்கப்பட வேண்டும்.
- மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பட்டியல் அவரிடம் இருக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளை அவ்வப்போது அவர் மேற்பார்வை செய்ய வேண்டும். அந்தப் பகுதியில் அதிக முன்னுரிமையில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள தீவிர நிலை மாற்றுத்திறனாளிகளின் தனிப் பட்டியல் ஒன்றையும் அவர் வைத்திருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு, இருக்கிற வசதிகளைக் கொண்டு தீர்வு காண்பதற்கு அவர் தான் பொறுப்பாளியாக இருப்பார். தேவைப்பட்டால், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் / குடியிருப்போர் நல சங்கத்தினரின் உதவியையும் அவர் பெற்றுக் கொள்ளலாம்.
சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் முன்னோடி அமைப்பாக செயல்படும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களும், சுகாதாரப் பணியாளர்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவை அந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mohfw.gov.in) உள்ளன. அதில் உள்ள தகவல்கள்:
- குடிமக்களுக்கும், களத்தில் முன் நின்று பணியாற்றும் பணியாளர்களுக்குமான விழிப்புணர்வுப் பிரசுரங்கள் (இந்தி மற்றும் ஆங்கிலத்தில்);
- நிறைய பேராகக் கூடுதல் மற்றும் சமூக இடைவெளி பராமரித்தல் குறித்த அறிவுறுத்தல்;
- மருத்துவமனைகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள். இதில் நோயாளிகளைக் கவனிப்பதற்கான டெலி மருத்துவ நடைமுறைகளும் அடங்கும்;
- பொதுவான ஹெல்ப்லைன் எண்கள்: 1075, 011-23978046, 9013151515
- அடிக்கடி எழும் கேள்விகள்
(Release ID: 1608610)
Visitor Counter : 723