அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்பங்களைக் கண்டறிவதற்கான பணிக்குழுவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைத்துள்ளது

நோய் கண்டறிதல், பரிசோதனை, சுகாதாரச் சேவை வழங்கல் தீர்வுகள், உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிற்கு நிதியுதவி

Posted On: 26 MAR 2020 4:21PM by PIB Chennai

கொவிட்-19 நோய் பரவல் தொடர்பான ஏராளமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், இந்தியாவில் கிடைக்கக்கூடிய பொருத்தமான தொழில்நுட்பங்கள், பொருள் உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்றபடி, நாட்டுக்கு உகந்த மிகவும் பொருத்தமான புதிய தீர்வுகளை உருவாக்கவும் அது முயன்று வருகிறது.

கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்பங்களைக் கண்டறிவதற்கான பணிக்குழுவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  அமைத்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் தொடங்குவோர், சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் வாயிலாக ,நோய் கண்டறிதல், பரிசோதனை, சுகாதாரச் சேவைகளுக்கான தீர்வுகள், உபகரணங்கள் விநியோகத்துக்கான தீர்வுகளுக்கு இந்தப் பணிக்குழு நிதி வழங்கும். முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், நோய் கண்டறிவதற்கான உபகரணங்கள், சுவாசக் கருவிகள், பிராணவாயு கருவிகள் , தரவுப் பகுப்பாய்வு, கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு, இணையவழி சார்ந்த தீர்வுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

விவரணையாக்கக் குழுவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, உயிரி தொழில்நுட்பத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில், அடல் புதுமை இயக்கம், சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், இந்தியாவில் தொடங்கிடு, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். நிதியுதவி அல்லது இதர உதவி அல்லது தொடர்புகள் தேவைப்படும்,  அதிக உற்பத்தித்திறனுடன் புதிதாகத் தொழில் தொடங்குவோரை பணிக்குழு  கண்டறியும்.

கொவிட்-19 குறித்த மிக முக்கியமான தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிந்துள்ள புதிய தொழில் முனைவோரையும், இதர அமைப்புகளையும் கண்டறியும்  நடைமுறையை விரைவுபடுத்துமாறு அதற்காக சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சகங்கள் மற்றும் துறைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

துரித மேம்பாடு, உற்பத்தி, பொருத்தமான தொழில்நுட்ப வாய்ப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஏற்கனவே, இரண்டு வெவ்வேறு முன்மொழிவுகளை வரவேற்றுள்ளது. புதிய மற்றும் ஏற்கனவே கிடைக்கும் தீர்வுகளை, அறிவியல் ரீதியாகவும், வணிக ரீதியிலான உற்பத்திக்கும் பயன்படுத்தும் வகையில், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆகியவை இந்த முன்மொழிவுகளை வழங்கியுள்ளன.

 



(Release ID: 1608397) Visitor Counter : 143