சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் -19 பாதிப்பின் இப்போதைய நிலை, மேலாண்மைக்கான செயல்பாடுகள் குறித்து அமைச்சர்களின் உயர்நிலைக் குழு ஆய்வு

சமூக இடைவெளி பராமரித்தல், வீட்டிலேயே தங்கியிருத்தல் நடைமுறைகள் & கோவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்த டாக்டர்கள் / மருத்துவ அலுவலர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தல்

Posted On: 25 MAR 2020 6:04PM by PIB Chennai

கோவிட் - 19 குறித்த அமைச்சர்கள் குழுவின் உயர்நிலைக் கூட்டம் இன்று நிர்மான் பவனில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தலைமையில் நடைபெற்றது.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் எஸ். பூரி, வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்தா ராய், கப்பல் போக்குவரத்து & ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு. மனுசுக் எல். மாண்டவியா ,  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே  ஆகியோரும் ராணுவ தலைமைத் தளபதி திரு. பிபின் ராவத்தும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் திருமிகு. பிரீத்தி சுதன், வெளியுறவு அமைச்சகச் செயலாளர் திரு. ஹர்ஷ் வர்த்தன் ஸ்ரீங்க்ளா, டி.எச்.ஆர். செயலாளர் & ஐ.சி.எம்.ஆர். டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா, ஜவுளிகள் துறை செயலாளர் திரு. ரவி கபூர், சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளர் திரு. சஞ்சீவ குமார், கப்பல் போக்குவரத்துத் துறை கூடுதல் செயலாளர் திரு. சஞ்சய் பந்தோபாத்யாய, வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் திரு டாம்மு ரவி, உள்துறை கூடுதல் செயலாளர் அனில் மாலிக், டி.ஜி.எச்.எஸ். டாக்டர் ராஜீவ் கார்க், குடும்ப நலத் துறை இணைச் செயலாளர் திரு. லாவ் அகர்வால் ஆகியோரும் ராணுவப் படைகள், ஐ.டி.பி.பி., பார்மசூட்டிகல்ஸ், டி.ஜி.சி.ஏ. மற்றும் ஜவுளித் துறைகளின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

கோவிட் - 19 தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்தாடல் செய்யப்பட்டது.  இதுதொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நோய்த் தடுப்புக்கான உத்திகளில் ஒன்றாக சமூக இடைவெளியை பராமரித்தலின் தற்போதைய நிலை, கோவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்த இதுவரை மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகள் பற்றி அமைச்சர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. மாநிலங்களின் திறன்களை பலப்படுத்துவது பற்றியும், கோவிட் - 19 சிகிச்சைக்கென தனியாக மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு போதிய நிதி ஏற்பாடு செய்தல், மருத்துவ மையங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் கிடைக்கச் செய்தல், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய சாதனங்கள் கிடைக்கச் செய்வது ஆகியவை இதில் அடங்கும். அத்தியாவசிய சேவைகளும், பொருள்களும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மற்றும் மருந்துகள் உற்பத்தி, தடுப்பூசி, கிருமிநாசினி, மாஸ்க்குகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க வகை செய்ய வேண்டும். கோவிட் - 19 பாதித்த நோயாளிகளுக்கென குஜராத், அசாம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவிட் 19 பரிசோதனைக்கு ஐசிஎம்ஆர் பட்டியலில் மொத்தம் 118 மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர்கள், சுகாதாரச் செயலாளர்கள், காவல் துறை டிஜிபிக்களுக்கு அமைச்சரவை செயலர் கடிதங்கள் எழுதியதுடன், அவர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்து பேசியுள்ளார் என்றும், முடக்கநிலை நடவடிக்கைளை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அவர்களுக்கு அமைச்சரவைச் செயலர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவிட் - 19 நோயைத் தடுப்பதற்கான சிறப்பான அணுகுமுறையாக சமூக இடைவெளியைப் பராமரித்தலின் அவசியமான முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், வீடுகளில் தங்கி இருப்பவர்கள், தனிமைப்படுத்தி சிகிச்சையில் இருப்பவர்கள், சுகாதார அமைச்சகம் கூறியுள்ள அனைத்து நடைமுறைளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தத் தகவல்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ``மாண்புமிகு பிரதமர்  திரு. நரேந்திர மோடி, நேற்று அறிவித்தபடி, நாடு முழுக்க முடக்க நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாம் வீடுகளிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் சமூக இடைவெளியையும் பராமரிக்க வேண்டும்'' என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கூறினார். 2020 மார்ச் 21 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து 64 ஆயிரம் பேர் இந்தியா வந்துள்ளனர் என்றும், அதில் 8 ஆயிரம் பேர் வெவ்வேறு தனிமைப்படுத்தல் மையங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும், 56 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமை சிகிச்சையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ``தொற்றும் தன்மையுள்ள நோயை எதிர்த்து நாம் போராடுகிறோம். நம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்க, அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யாமல் போனால் இந்திய தண்டனைச் சட்டத்தின்  பிரிவு 188ன் கீழ் சட்டபூர்வ நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்'' என்று அமைச்சர் கண்டிப்புடன் கூறினார்.

சுகாதாரத் துறையில் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் நமக்காக முன்களத்தில் நின்று, கோவிட் -19ல் இருந்து நம்மைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கேட்டுக்கொண்டார். வதந்திகள் அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

****
 


(Release ID: 1608261) Visitor Counter : 227